சிறுகதை: அரசியல்வாதி – சாவி

அல்லிக்குப் பெண்குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. தொழிலதிபர் அதியமான் இல்லத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் பெண் குவாகுவா! மகன் பாரி வழித்தோன்றல். வீடே குதூகலத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

‘குழந்தையின் பொன்னிற மேனிக்குப் பொருத்தமாக அழகான ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்ன பெயர் சூட்டலாம்?’ என்று எல்லோரும் கூடி யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் கரைவேட்டித் தொண்டன் ஒருவன் ஓடிவந்தான்.

வந்தவன், “மரப்பாலம் திறக்க நாளைக்கு எம்.எல்.ஏ. ஐயா வராங்களாம்…” என்று மகிழ்ச்சிக் குரலில் சொல்லிவிட்டு அவசரமாகத் திரும்பி ஓடினான்.

தொழிலதிபர் அதியமானுக்கு, இளவழகன் எம்.எல்.ஏ-வுடன் ஐந்தாறு வருடங்களாக நல்ல பழக்கம். முந்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய மந்திரியாக இளம்வயதிலேயே பதவி வகித்தவர். அமைச்சராக இருந்தபோது, அதியமானுக்குச் சொந்தமான நூற்பாலையை, வெள்ளிக் கத்தரிக்கோல் கொண்டு ரிப்பன் வெட்டித் திறந்துவைத்த கைராசிக்காரர். இன்றுஅந்த ஆலை ஆல்போல் தழைத்து நூல்போல் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.

இளவழகன் எம்.எல்.ஏ. வரப்போகும் செய்தி அறிந்த அதியமான், “ரொம்ப நல்லதாப் போச்சு. பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி ஆச்சு! குழந்தைக்கு நாளை நம்ம எம்.எல்.ஏ-வையே பெயர் சூட்டச் சொல்லிடுவோம்…” என்றார் பெருமை பொங்க!

‘பிறக்கும்போதே குழந்தையின் அதிர்ஷ்டத்தைப் பாரேன்! தலைவர் கையாலே பெயர் சூட்டிக்கொள்ளப் போகுதே!’ என்று சந்தோஷ எக்களிப்பில் திளைத்தனர்.

குழந்தையின் தாய் அல்லி மட்டும் முகம் வாடிப்போனாள். ‘பதினைந்து வருடங்களுக்கு முன் தன் காதலனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனதே…’ என்று உள்ளூர வேதனைப்பட்டாள். அந்த ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாமல் தடுமாறித் தவித்தாள்.

அப்படிப்பட்ட ரகசியம் என்ன அது?

திருமணமாவதற்கு முன் அவளுக்கொரு காதலன். தாய்வீடு தஞ்சாவூர். இருபது வயதுவரை படித்தது, வாய்க்காலில் நீராடியது, கதம்பம் வாங்கிச் சூடியது, சினிமா பார்த்தது, வெற்றிலைத் தோட்டத்தில் காதலனைச் சந்தித்துப் பேசியது எல்லாமே தஞ்சாவூரில்தான்!

அந்த இனிய நாட்களின் புத்தகத்தில் அன்றே கடைசி ஏடு…

“உஸ், என்னைத் தொடாதீங்க… தொட்டுப் பேசாதீங்க” என்றாள் அல்லி.

“ஏன், தொட்டாப் புடிக்கலையா…? கட்டிப் புடிக்கச் சொல்றியா…?” என்று கேட்டான் அவள் காதலன் பாலமுருகன்.

“என்னைக் கட்டிப்புடிக்கப் போறவர் வேற ஒருத்தர், அவர் பவானியில் இருக்கார். ஆமாம்… அவருக்கும் எனக்கும் அடுத்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது. அப்பா எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு முடிச்சுட்டாரு!” என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டாள் அல்லி.

சற்றும் எதிர்பாராத இந்தச் செய்தி கேட்டுக் காதலன் மனம் ஒடிந்துபோனான். ‘இந்தப் பெண்கள் எந்த நேரத்தில், எப்படி மாறுவார்கள் என்று புரிபடாதுதான். அல்லியும் இதற்கு விலக்கல்ல!’ என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

“அப்படின்னா…?” என்று இழுத்தான்.

“நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மறந்துர வேண்டியதுதான். இதற்குமேல் நம் காதலை வளர்த்தினா, பெரிய விவகாரம் ஆயிரும். போலீஸ் வரும். பெரிய இடத்துச் சம்பந்தம்…” என்றாள்.

“ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டா…?”

“ஓடிப்போறது, ஓட்டல் அறையில் தங்கறது, லெட்டர் எழுதி வெச்சுட்டு விஷம் குடிக்கிறது… இதுக்கெல்லாம் நான் தயார் இல்லே! வேணாங்க… என்னை மறந்துடுங்க…”

“இதென்ன வேர்க்கடலையா, வேண்டாம்னா தூக்கி வீசி எறிஞ்சுடறதுக்கு…?” – காதலன் ஒரு கொதிப்போடு கேட்டான்.

“உங்க வேதனை எனக்குப் புரியுது. உங்களைப் பிரிந்து போக எனக்கு மட்டும் ஆசையா, என்ன?” துக்கம் தொண்டை அடைக்க, கண்ணீர் மல்கக் கேட்டாள். விசித்தாள். பார்வையிலேயே வேதனையை, சோகத்தை, மனக்குமுறலை வெளிப்படுத்தினாள்.

“வேறு வழியே இல்லையா, அல்லி…?”

‘இல்லை!’

“சரி; எனக்கொரு வாக்குறுதி தருவியா…?”

“என்ன சொல்லுங்க…?”

“என் சின்ன வயசிலயே அப்பா இறந்துட்டாங்க. எனக்கு எல்லாமே என் அம்மாதான். என்னை வளர்த்து ஆளாக்கின தெய்வம் அவங்க… பேர் எட்டியம்மா. இரண்டு வருஷம் முன்னால அவங்களும் இறந்துட்டாங்க. அல்லி! உனக்கு கல்யாணம் ஆகி, உன் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தா, அந்தக் குழந்தைக்கு நான் தெய்வமாப் போற்றுகிற என் தாயின் பெயரை வைத்துக் கூப்பிடுவியா…?”

“நிச்சயம் கூப்பிடறேன்…” என்று தலையசைத்தாள்.

“சத்தியமா…?”

“சத்தியமா!”

அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு. அடுத்த மாதமே அல்லிக்குத் திருமணமாகி, கணவனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த பவானிக்குப் போய்விட்டாள்.

தென்றலாக வீசிக்கொண்டு இருக்கும் அவளுடைய தாம்பத்திய வாழ்க்கையை மேலும் இனிமையாக்க, மூன்று பிள்ளைக் குழந்தைகளுக்குப் பிறகு ஆசைக்கு ஒரு பெண் குழந்தை தங்க விக்ரஹம் போல் இப்போது பிறந்திருக்கிறது.

‘அபூர்வமாகப் பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு எட்டியம்மா என்று பெயர் சூட்டி, வாய் இனிக்க அழைக்கவேண்டும். அன்று காதலனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்’ என்றெல்லாம் எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த வேளையில்தான், அதியமானின் திடீர் அறிவிப்பு அவளை நிலை குலையச் செய்துவிட்டது. ‘தன் மனக்கோட்டை இப்படித் தவிடுபொடியாக நொருங்கிப் போச்சே!’ என்று இடிந்து போனாள்.

பாலம் திறக்கும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எம்.எல்.ஏ. ஏழு மணியளவில் காந்தி மைதானத்தில் பேசப்போவதாக ஏற்பாடு. நாலு மணியிலிருந்தே ஒலிபெருக்கி, ஊர் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.

“எம்.எல்.ஏ. இன்னும் சில மணித்துளிகளில் வந்துவிடுவார்… வந்து கொண்டிருக்கிறார்… மக்கள் அமைதிகாக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொல்கிறோம்!” என்று தமிழைக் கொன்று கொண்டிருந்தார் ஒருவர். மைதானத்தில் கட்சிக் கொடிகள் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன. அதியமான் குடும்பத்தினருக்கு மேடையில் சிறப்பு ஆசனங்கள் போட்டு வைத்திருந்தார்கள். எம்.எல்.ஏ. வழக்கம்போல் தாமதமாகவே வந்து சேர்ந்தார். அவர் வரும் வழியெங்கும் தாரை தப்பட்டை முழங்க ஆங்காங்கே மாலை மரியாதைகள், வாழ்த்தொலிகள், பெண்களின் ஆரத்திகள், பட்டாசு வெடிப்புகள்… அமைச்சராக இருந்தபோது ஊருக்கு ஆஸ்பத்திரி, கல்லூரி என்று பல நன்மைகள் செய்தவர் என்பதால், தடபுடலான வரவேற்பு!

உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ எம்.எல்.ஏ. மேடைக்கு வந்து சேர்ந்ததும் அதியமான் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார். அவரைப் பக்கத்தில் வந்து அமரச் சொல்லிக் கைகாட்டினார் எம்.எல்.ஏ.! மாலை மரியாதை முடிந்ததும், அதியமான் மனைவியை, மகனை, மருமகளை அறிமுகம் செய்துவைத்த கையோடு, “குழந்தை பிறந்து பத்துநாள்தான் ஆகுது. நீங்கதான் பெயர் சூட்டனும்!” என்றார்.

எம்.எல்.ஏ-வைப் பார்த்த மாத்திரத்தில் அல்லிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! வந்திருக்கும் எம்.எல்.ஏ. யார் என்பது எளிதில் புரிந்துவிட்டது அவளுக்கு. அன்றைய அவளுடைய காதலன் பாலமுருகன்தான், இன்றைய இளவழகன் எம்.எல்.ஏ. என்று. அன்று அவனுக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றப் போகும் மகிழ்ச்சி நெஞ்சை முட்ட உணர்ச்சி வசப்பட்டவள், ‘அம்மாடி! என் கவலை தீர்ந்தது. அவரே தன் தாயின் பெயரைச் சூட்டி விடுவார்!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

முகத்தில் புன்சிரிப்புத் தவழ, வெட்கத்தில் முகம் சிவக்க… குழந்தையைத் தூக்கி எம்.எல்.ஏ. முகத்துக்கு நேராகக் காட்டினாள்.

இளவழகனுக்கும் அல்லியைப் புரிந்துகொள்ள அதிக நேரமாகவில்லை. அவன் மனக்கண்முன் தஞ்சாவூர் வெற்றிலைத் தோட்டம் நிழலாடியது… தெய்வமாக எண்ணிய தாய் நினைவுக்கு வந்தார். சத்தியம் நினைவுக்கு வந்தது. தான் எதையும் மறக்கவில்லை என்று கூறுவதுபோல, அல்லியைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தார். அழகாக, நிதானமாக, கணீரென்று குழந்தைக்குப் பெயர் சூட்டினார் – தன் தாயின் பெயரை அல்ல… தன் கட்சித் தலைவியின் தாயின் பெயரை – அந்த பக்கா அரசியல்வாதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *