சிறுகதை: தவம் – அய்க்கண்

திருப்பத்தூரிலிருந்து பஸ்ஸில் காரைக்குடிக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

வழியில் கோவிலூரிலிருந்தே இருபக்கங்களிலும் கட்சிக் கொடிகளும், தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் கோலாகலமாகக் காட்சியளித்தன.

பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரரிடம் விசாரித்தேன்.

அவர் எங்கள் ஊர்க்காரர். வியாபாரக் கொள்முதல் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் போய் வருகிறவர். அதே மாதிரி அடிக்கடி கட்சிக் கூட்டங்களுக்கும் போய் வருகிறவர்.

“ஸார்! உங்களுக்குத் தெரியாதா…? நம்ம இண்டஸ்ட்ரிஸ் மினிஸ்டர் ராமசாமி தான் இன்னிக்கு காரைக்குடிக்கு விஜயம் செய்கிறார். கோட்டையூரிலே ஒரு தொழிற்சாலைக்கு அஸ்திவாரக் கல் நாட்டுகிறார். அப்புறம் பள்ளத்தூரிலே” என்று மாண்புமிகு அமைச்சரின் மின்னல்வேகச் சுற்றுப்பயணத் திட்டத்தை விவரிக்க ஆரம்பித்து விட்டார் அவர்!

“அப்படியா…?” என்று ஆமோதித்து விட்டு, அமைதியானேன். ஆனால், அவர் என்னை விடவில்லை!

“ராமசாமி நம்ம பக்கத்து ஊர்க்காரர்தான் ஸார்!” என்றவர், சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய், “ஏன் ஸார், அவர் உங்க காலேஜிலே தான் படிச்சாராம்… உங்களுக்கு ஞாபகம் இல்லியா…?” என்று ஓர் எக்கச்சக்கமான கேள்வியைக் கேட்டு விட்டார்.

எங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால், எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்தான்… ஆனால், ஒரு கல்லூரியிலே எத்தனையோ ராமசாமிகள், சுப்பிரமணியன்கள், சீனிவாசன்கள் இருப்பார்களே? அவர்களில் எந்த ராமசாமி இந்த அமைச்சர்?

கடகட என்று பேசிக் கொண்டே இருந்தார் அவர்.

காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கல்லுக்கட்டிப் பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.

கடைத்தெரு எல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாறு காணாத மக்கள் வெள்ளம், ஆங்காங்கே நின்று, மாண்புமிகு அமைச்சரின் முகவிலாசத்தை தரிசிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. நானும் ஓர் ஓரமாக நின்று அமைச்சருக்காக, வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தேன்.

தேர்தல் சமயத்தில், சந்து சந்தாக நடந்து வந்து, வீடு வீடாக நுழைந்து கை கூப்பியபடியே ஓட்டுக் கேட்ட அரசியல்வாதியை, இப்போது சுற்றுப்பயணம் போகும் வழியில் ஊர்வலமாக வரும்போது, காத்திருந்து ஓரமாக நின்று கைகூப்பி வணங்கித் தரிசிக்கும் நிலை…!

‘இதோ… இதோ’ என்று கடைசியாக வந்தே விட்டார் அமைச்சர்!

தூரத்தில் வரும்போதே அமைச்சரை உன்னிப்பாகக் கவனித்தேன்.

அமைச்சரைப் பார்த்து, அவர் எந்த மாணவன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், என்னையும் அறியாது சிறிது பாதைக்குள்ளே வந்து விட்டேன் போலிருக்கிறது…

“ஏய்… போ.. போ…” என்று லத்திக் கம்பை உயர்த்தியபடி ஒரு போலீஸ்காரர் என்னைத் தடுத்து நிறுத்திப் பின்னே தள்ள, அப்போது, “ஸார், ஸார்…!” என்று அமைச்சர் காரிலிருந்தே என்னை நோக்கிக் கை காட்ட, சட்டென்று கார் நின்று விட்டது.

காரிலிருந்து வேகமாக இறங்கிய அமைச்சர், என் கைகளைப் பற்றிக் கொண்டு, “ஸார், சௌக்கியமாயிருக்கீங்களா…?” என்று கேட்டதும் நான் திகைத்து நின்றேன். இன்னும் எனக்கு அவரைச் சரியாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

நான் பேந்தப் பேந்த விழிப்பதைப் புரிந்து கொண்டு, “ஸார்! என்னை ஞாபகம் இல்லையா? நான் உங்க காலேஜில அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே பி.காம். படிச்சேன் ஸார்! என்.எஸ்.எஸ்.ஸிலே கூட லீடராயிருந்திருக்கேன்…” என்று அமைச்சர் சொன்னதும், எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்து விட்டது!

நான் டைரக்டராயிருக்கும் நாட்டுப் பணிக்குழுவிலே ராமசாமி தலைவராக இருந்தது, இப்போது எனக்கு நன்றாக நினைவு வந்தது.

“ஓ… எஸ்… இப்போ நல்லா ஞாபகம் வந்திட்டுது ராமசாமி…! நீ இவ்வளவு புகழோட மினிஸ்டராயிருக்கிறதைப் பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோஷம்பா…!  ஒரு தடவை நம்ம காலேஜுக்கு வாயேன்…!”

ராமசாமி ஒரு ‘மாண்புமிகு’ என்பதையே மறந்து, பழைய வழக்கப்படி ஒருமையில் அமைச்சரோடு பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து, நானே சட்டென்று திடுக்கிட்டு நிறுத்தினேன்.

“ஓ…! ஐயாம் ஸாரி… எக்ஸ்கியூஸ்மி, உங்களை மரியாதையில்லாம…” என்று என் நாக்குப் பணிவாகக் குளற ஆரம்பித்தது.

“பரவாயில்லை ஸார்! டெல்லிக்கு ராஜா ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதானேனு சொல்லுவாங்களே, அது மாதிரி, நான் எங்கேயிருந்தாலும், உங்களுக்கு ஸ்டூடன்ட்தானே ஸார்?” என்று பவ்யமாகச் சிரித்தான் – சிரித்தார் அமைச்சர்.

“உனக்குதான் தெரியுமே… எனக்கு அரசியல் என்றாலே வேப்பங்காய்! அதனாலேதான் அரசியலிலே நீ இவ்வளவு வளர்ந்திருக்கிறதெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சு… நீ இன்னும் உயர்ந்து நல்ல புகழோட வாழணும்பா..” என்று மனதார வாழ்த்தினேன்.

தாங்க்ஸ், ஸார்! நான் வர்றேன்” என்று விடைபெற்றுக் கொண்டு, காரில் ஏறினார் அமைச்சர்.

ஊர்வலம் மறுபடியும் நகரத் தொடங்கியது.

என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய கான்ஸ்டபிள் மட்டுமல்ல சுற்றிலும் இருந்த எல்லாருமே இப்போது என்னை கௌரவமாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

கூட்டம் சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பித்தது.

ஏதேதோ பழைய நினைவுகள் வந்தன.

அந்தக் காலத்து மாணவன் ராமசாமிக்கும், இந்தக் காலத்து அமைச்சர் ராமசாமிக்கும் எவ்வளவு வித்தியாசம்!

கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளிலும் இந்த ராமசாமி, அரசியல், கட்சி என்று வாய் திறக்கவில்லை!

மேடைகளில் அடிக்கடி பேசுவான். ஆனால், அரசியலைப் பற்றியே மூச்சுவிட மாட்டான். இலக்கியம், பொது விஷயங்கள் பற்றியே எப்போதும் அவன் பேச்சு இருக்கும்.

படித்துப் பட்டம் வாங்கி, ஓர் அலுவலகத்தில் அல்லது வங்கியில் நல்ல திறமையான நிர்வாகியாகப் பரிமளிப்பான் என்று எதிர்பார்க்கப்பட்ட அவன், இப்படி அரசியலில் இறங்கி, அமைச்சராகப் புகழ் பெறுவான் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.

என் சிந்தனையோட்டத்தைக் கலைப்பது போல், “ஸார்! வணக்கம்…” என்று கையில் கொடியோடு என் முன்னே வந்து நின்றான் ஒரு இளைஞன்.

“சீனிவாசனா? வாப்பா – சௌக்கியமா இருக்கியா?” என்று அவனை விசாரித்தேன்.

ராமசாமிக்கு முன்பே படித்து முடித்துச் சென்றவன்தான் என்றாலும், சீனிவாசனை நாங்கள் மறக்க முடியாது!

அந்தக் காலத்தில் அவனும்… அவனுடைய ‘தலைவர்’ சுப்பிரமணியனும் சேர்ந்து, கல்லூரியில் நடத்திய போராட்டங்கள் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

கல்லூரி சம்பந்தப்பட்ட போராட்டங்கள் மட்டுமல்ல; வெளியே அரசியல் கட்சிப் போராட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்வான் இந்த சீனிவாசன்.

தேர்தல் சமயங்களில், காரிலே கொடிகளைக் கட்டிக் கொண்டு மைக்கிலே  தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்யவே கிளம்பி விடுவான். கிராமப்புறங்களில் மேடைகளிலும் ஏறிப் பேசி முழங்குவான்!

“சீனு! உன் போராட்டத்தையெல்லாம் காலேஜோட நிறுத்திக்கோ… படிக்கிற மாணவன், இப்படி அரசியல் கட்சி நடவடிக்கைகளிலே நேரடியாகக் கலந்துக்கக் கூடாது…” என்று அடிக்கடி அவனைக் கண்டிப்பேன் நான்.

என் அறிவுரையை மைக்கில் வாங்கி, ஆம்ப்ளிபையரில் விட்டு விடுவான், அவன்!

“நம்ம நாட்டிலே எழுதப் படிக்கத் தெரியாதவங்ககிட்டே அரசியலை விட்டுட்டதாலேதான், நாடு இப்படி பாழாய்ப் போயிடுச்சு ஸார்! நாங்க தானே எதிர்காலத் தலைவர்கள், நாங்க இப்போதே அந்த அனுபவத்தைத் தெரிஞ்சுக்கிறது, நல்லதுதானே?” என்பான்.

ஆறு ஏழு  வருட வளர்ச்சி, அவனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

படித்துப் பட்டம் வாங்கி, அரசியலில் ஒரு தலைவனாய் விளங்குவான் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனிவாசன், இன்னும் கொடி தூக்கும் தொண்டனாகவே தொடர்ந்து வாழ்வதைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன் நான்.

கல்லூரியிலே அரசியலே பேசாத ராமசாமி, இன்று ஓர் அரசியல் கட்சியில் தலைவனாகி, அமைச்சராகி விட்டான்.

அதே கட்சியில் அன்று தொண்டனாகச் சேர்ந்த சீனிவாசன், இன்றும் தொண்டனாகவே கோஷமிட்டு நடக்கிறான்.

எனக்கு வியப்பாகவே இருந்தது!

அவன் வந்த லாரி புறப்பட்டு விட்டது. என்னிடம் விடை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடினான் சீனிவாசன்.

காரைக்குடிக்கு வந்த வேலையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினேன்.

பஸ்ஸில் நிறையக் கூட்டம். நான் டிக்கெட் வாங்கிக்கொண்டு காலியாகக் கிடந்த கண்டக்டர் ஸீட்டில் உட்கார்ந்தேன்.

பஸ் புறப்படும் நேரத்தில் கண்டக்டர் வந்து “எந்திரிய்யா… போலீஸ் ஆபீஸர் வர்றார்…” என்று என்னை எழுப்பி விட்டார்.

நல்ல உயரமும், கட்டுமஸ்தான உடம்பும் இளம் மீசையுமாக, தூய வெள்ளையுடையில் மஃப்டியில் வந்திருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும், அந்த முகம் எங்கோ பார்த்த முகமாகத் தோன்றியது…

பஸ்ஸில் ஏறி, கண்டக்டர் காட்டிய ஸீட்டில் உட்காரப்போன அந்த இளைஞன், சட்டென்று என்னைப் பார்த்ததும், ‘ஸார், நீங்களா? சௌக்கியமாயிருக்கீங்க்களா? உட்காருங்க ஸார்!’ என்று என்னைப் பணிவோடு விசாரித்து உட்காரச் செய்தான்.

அவன் யார் என்று அடையாளம் தெரியாமல் வழக்கம்போல், பேந்தப் பேந்த விழித்தேன்.

“ஸார்! என்னை ஞாபகம் இல்லையா? நான்தான் ராஜேந்திரன். மூணு வருஷத்துக்கு முன்னாலே உங்க காலேஜிலே, பி.ஏ. படிச்சேன். ஐ.பி.எஸ். எக்ஸாமினேஷனிலே பாஸ் பண்ணி, டிரெயினிங் முடிஞ்சு மதுரையிலே, அடுத்த வாரம் டி.ஒய்.எஸ்.பி.யாக வேலையில் ஜாயின் பண்ணப் போறேன்…” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொன்டான், அவன்.

இப்போது நான் அவனை நன்றாக அடையாளம் புரிந்து கொண்டேன்.

அந்த ராஜேந்திரன், கல்லூரியில் படிக்கும்போது, இவ்வளவு திடகாத்திரமாக இருக்கவில்லை. சுமாரான உடற்கட்டோடு இருப்பான். ஆனால் விளையாட்டுக்களிலும், என்.சி.சி.யிலும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வான்.

தானுண்டு, தன் படிப்பு உண்டு என்று எப்போதும் லைப்ரரியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். வகுப்பிலும் அடக்க ஒடுக்கமாக முன் பெஞ்சில் அமர்ந்து பாடங்களைக் கவனிப்பான். யாரொடும் அனாவசியமாக அரட்டையடிக்க மாட்டான்.

கல்லூரியில் ஏதாவது ஸ்டிரைக், தகராறு, போராட்டம் என்றால், சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பிப் போய்விடுவான் – அவ்வளவு பயந்தாங்கொள்ளி அவன்!

ஒருநாள் ராத்திரி பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினான் அவன்.

எழுந்து வந்து, என்ன விஷயம் என்று கேட்டேன்.

“ஸார், ஸார்…! ஹாஸ்டலில் பெரிய தகராறு நடக்கும் போலிருக்கு ஸார்… யூனியன் எலக்ஷனிலே ரெண்டு கோஷ்டியும் ராத்திரிக்குள்ளே அடிச்சுக்கிடுவாங்க போலிருக்கு! நான் பயந்து ஓடிவந்திட்டேன்… இங்கே ராத்திரி படுத்திருந்திட்டு, நாளை விடிகாலையிலே ஊருக்குப் போயிடறேன், ஸார்!” என்று நடுங்கும் உடலோடும் குரலோடும் கெஞ்சினான் ராஜேந்திரன்.

அவனுக்குத் தைரியம் சொல்லிச் சமாதானப்படுத்தி, ஹாஸ்டலுக்கு அனுப்புவதற்குள் விடிந்து விட்டது.

அப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளி, இப்போது ஐ.பி.எஸ்.ஸில் போலீஸ் ஆபீஸர்!

“வெரிகுட் ராஜேந்திரன்! ரொம்ப சந்தோஷம்” என்று மகிழ்ச்சியோடு அவனை வாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தேன்.

திருப்பத்தூரில் இறங்கி நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே உட்கார்ந்திருந்தவனைப் பார்த்துத் திகைத்துப் போனேன்.

முன்னாள் ‘தலைவர்’ சுப்பிரமணியன்தான் உட்கார்ந்திருந்தான்.

“ஸார், வணக்கம்!” என்று எழுந்து நின்றான் அவன்.

“வா சுப்பு! உனக்கு ஆயுசு நூறு… உன்னைத் தான் நினைச்சுக்கிட்டே வந்தேன்…”

“என்னைக் கூட நினைப்பீங்களா ஸார்?” என்று நம்பிக்கையில்லாமல் கேட்டான் அவன்.

“ஏன் எல்லா ஸ்டூடண்ட்ஸையும்தான் நினைச்சுக்குவோம்” என்று சொல்லி விட்டு, “அதுசரி, உட்கார்… சௌக்கியமாயிருக்கியா? இப்போ எங்கே வேலை பார்க்கிறே?” என்று விசாரித்தேன்.

“வேலை தேடற வேலைதான் பார்த்துக்கிட்டிருக்கேன் ஸார்! ஒரு வேலையும் கிடைக்களே. நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் இங்கே மில் வைச்சிருக்கார். அதிலே வேலை கிடைக்குமானு கேட்கத்தான் வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன். நீங்க சௌக்கியமாயிருக்கீங்களா ஸார்?” என்று பரிவோடு கேட்டான் சுப்பிரமணியன்.

“நீ பி.எஸ்.ஸி. முடிச்சிட்டே இல்லியா? டிகிரி வாங்கிட்டியா!”

“இல்லே ஸார்! தேர்ட் பார்ட் எல்லாம் அப்படியே அர்ரியர்ஸாய் நின்னு போயிடுச்சு… காலேஜ் ஹாஸ்டல் மாதிரி, ஊரிலே, வீட்டிலே வசதிகள் இருக்குமா? ஊரிலே படிக்கவே முடியலே. படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, வேலை தேட ஆரம்பிச்சுட்டேன்” என்று அவன் குரலில் ஆழமான சோகம் சுருதியாக  இழைந்தது.

அன்று இரவு என் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஊருக்குப் புறப்பட்டான் அவன்.

அந்த ஒரு நாள் அனுபவம், என் உள்ளத்தில் தீவிரமான சிந்தனையலைகளை எழுப்பி விட்டது.

கல்லூரி என்பது வருங்காலத்தை உருவாக்கும் இடம் என்று சொல்லுகிறோமே, அது எந்த அளவுக்கு உண்மை…?

கல்லூரியிலே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தலைவரா’கத் திகழ்ந்த ஒருவன், வேலை தேடித் திரியும் ஒரு சாதாரண ஆளாக அலைந்து திரிகிறான்…!

கல்லூரியில் அரசியல் பக்கமே தலை வைத்துப் படுக்காத ஒருவன் அரசியலில் ஈடுபட்டு, அமைச்சராகவே உயர்ந்து விட்டான்!

அரசியல் நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருத்தன், சிறிதும் வளர்ச்சியோ, முன்னேற்றமோ அடையாமல் கீழ்மட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கிறான்.

சண்டை, தகராறு என்றாலே பதுங்கி ஒளியும் பயந்தாங்கொள்ளி ஒருவன், போலீஸ் ஆபீஸராகப் பரிணமித்திருக்கிறான்.

இவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கும் – கல்லூரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையோ…?

மறுநாள் கல்லூரி முதல்வரிடம் அன்று சந்தித்த மாணவர்களைப் பற்றிச் சொன்னேன்.

“ஸார்! எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கு ஸார்!” என்றதும் பிரின்ஸ்பால் மெதுவாகஸ் சிரித்தார்.

“மிஸ்டர் ரகு! இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கு? கல்லூரி என்பது, படிப்பும் பயிற்சியும் பெறுகிற ஸ்தலம். பிற்கால வாழ்க்கைக்கு தேவைப்படும் அறிவையும் கருவிகளையும் சேகரித்துக் கொள்ளும் இடம் இது. இதிலே கருவிகளைப் பயன்படுத்தி வீணாக்கிவிடக் கூடாது. பழங்காலத்திலே முனிவர்கள் காட்டுக்குப்போய் மூச்சடக்கி, பசி, தாகம், இன்பம் எல்லாம் துறந்து, ஆசைகளை அடக்கித் தவம் செய்து சக்தி பெற்றதாகச் சொல்வார்களே, அது மாதிரி மாணவர்கள் படிப்பதும் ஒரு ‘தவம்’ தான்! படிக்கிறபோது, தன் விருப்பு வெறுப்புகளைத் துறந்து, சுதந்திர உரிமை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், ஆத்திரம், கோபத்தையெல்லாம் அடக்கி, படிப்பே லட்சியமாயிருக்கணும். அப்படி இருந்த பிறகு, கிடைக்கிற சக்தியும் அறிவும் பிற்காலத்து வாழ்க்கைக்கு உதவி செய்யும். உயர்வை ஏற்படுத்தும். தவம் செய்ய வேண்டிய காலத்தை வீணாக்கிட்டா, பின்னாலே அவனுக்கு சக்தி எப்படி உண்டாகும்?” என்று கேட்டார் அவர்.

முதல்வரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க ஏதும் தோன்றாமல் நின்றேன் நான்.

என் மனத்திரையில் நிழலுருவங்களாய்ப் பழைய மாணவர்கள் தோன்றி மறைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *