சிறுகதை: தில்லியில் தென்னகத்தின் புகழ் – தே. ப. பெருமாள்

தென்னகத்தில் தனது நகைச்சுவையாலும் சமய சந்தர்ப்பப் புத்திக் கூர்மையாலும் பேரும் புகழும் பெற்ற தெனாலிராமனைப் பற்றிய புகழ் வடநாட்டிலும் பரவத் தொடங்கிற்று. தில்லியில் அப்போது சக்கரவர்த்தியாக இருந்த பாபரும் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். 

இவனது நகைச்சுவையையும் விகட  வேடிக்கைகளையும் தாமும் கண்டு களிக்க ஆர்வம் கொண்டு, ஒரு மாத காலத்திற்குத் தெனாலிராமனை அனுப்பி வைக்க, சக்கரவர்த்தி பாபர், கிருஷ்ணதேவராயருக்குக் கடிதம் எழுதினார்.

தம் அரசவையிலுள்ள ஒரு விகடக் கலைஞரின் திறமையை சக்கரவர்த்தி பாபரும் விரும்புகிறார் என்பதில் கிருஷ்ணதேவராயருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவர் தெனாலிராமனை அழைத்து “ராமா, சக்கரவர்த்தி பாபர் உன்னை அழைத்திருக்கிறார். இது உனக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே பெருமை தரும் செய்திதான். அங்கு நீ உன் திறமையைக் காட்டி, எல்லாரையும் மகிழ வைத்துச் சக்கரவர்த்தியிடமிருந்து பொற்குவியல் பரிசாகப் பெற்று வர வேண்டும். அப்போதுதான் நமக்கெல்லாம் பெருமை. அப்படி நீ வரவில்லையென்றால் இந்த அவையிலிருந்து நீ விலக்கப்படுவதோடு அவையின் இகழ்ச்சிக்கும் ஆளாவாய்” என்று எச்சரிக்கை செய்து தில்லிக்கு அவனை அனுப்பி வைத்தார்.

தெனாலிராமன் தில்லிக்கு வருகிறான் என்றறிந்த சக்கரவர்த்தி பாபர், தம் அவைப்புலவர்களிடம் இங்கு வருகிற விஜயநகரத் தெனாலிராமன், எந்த மாதிரியான விகடங்கள் செய்தாலும், அல்லது தனது அபூர்வத் திறமையைக் காட்டினாலும் இங்குள்ள யாரும் அவற்றைப் பார்த்து ரசிக்கவோ, கண்டுகளிக்கவோ கூடாது” என்று கட்டளையிட்டிருந்தார். மேலும் அவர், தென்னகத்தான் ஒருவன் இங்கிருந்து புகழ்பெற்றுச் செல்லுதல் கூடாது என்று கண்டிப்புடன் ஆணையிட்டிருந்தார்.

தில்லிக்கு வந்த தெனாலிராமன் பாபர் அரசவைக்கு வந்து தனது அபூர்வ விகடங்களையெல்லாம் செய்து காட்டினான். புத்திக்கூர்மையாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் தந்திரங்களாலும் அவனது விகடங்கள் ஈடு இணையற்றிருந்தன. ஆனால் சக்கரவர்த்தி பாபரது அவையில் இவனை யாரும் பாராட்டிப் போற்றவில்லை.

தெனாலிராமன் ‘இது ஏதோ ஒரு சூழ்ச்சியால்தான் இப்படி நடை பெற்றிருக்கிறது’ என்பதை ஊகித்துக் கொண்டான். எனினும் அவன் தளர்ந்து விடவில்லை. இங்கு வெற்றி பெற்றுச் செல்வதே தனது இலட்சியம் எனக் கொண்டிருந்தான்.

கிழவேடம் பூண்ட தெனாலிராமன்

ஒரு நாள் மாலையில் பாபர் தம் மெய்க்காப்பாளரோடு பாதை வழியாக உலாவிக் கொண்டு வந்தார். வழியில் அவர் கண்ட காட்சி, அவருக்கு வியப்பை அளித்ததோடு நகைப்பையும் கொடுத்தது. தெனாலிராமன் கிழவேடம் புனைந்த பக்கிரியாக நின்று பாதையின் ஒரு கரையில் மாங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தான். பாபர், முதிர்ச்சி கொண்டவராய்த் தோன்றிய அந்தப் பக்கிரியிடம், “பெரியவரே இந்தத் தள்ளாத வயதில் இம் மாங்கன்றை ஏன் நடுகிறீர்? உங்களுக்கு இதனால் வரும்பயன் என்ன? இம் மரம் கொஞ்சம் வளர்ந்து பெரிதாவதற்குள் உமது வாழ்வு முடிந்துவிடுமே” என்றார்.

பக்கிரிவேடம் புனைந்த தெனாலிராமன், ‘கெக்கக்கே’ என்று சிரித்தான்.

பாபர் அவனிடம் “ஏன் இப்படிச் சிரிக்கிறீர்” என்று  சற்றுக் கருத்தோடு கேட்டார்.

“இன்று நாம் சுவைமிக்கத் தீங்கனிகளைச் சாப்பிடுகிறோமே, இக் கனிகளை உதிர்க்கின்ற மரங்களை நாமா வளர்த்தோம்? நமது முன்னோர்கள் நட்டு வளர்த்தார்கள். பயனை நாம் அனுபவிக்கிறோம். இதைப்போல்  நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் அளிக்கின்ற கனிகளை நமக்குப் பின் வருபவர்கள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்ய வேண்டியது மனித தர்மமல்லவா” என்றான்.

இம் மொழிகளைக் கேட்ட பாபருக்கு பக்கிரி சொன்ன உண்மை அனுபவமும் மனித குலத்தின் தியாக உணர்வும் மனத்தில் பதிந்தது. முதியவரின் வாக்கின் உண்மைக்கு மகிழ்ந்து, பாபர் தெனாலிராமனைப் புகழ்ந்து அவனுக்குப் பொற்குவியல் ஒன்றைப் பரிசாக அளிக்க ஆணை வழங்கினார். இதைக் கண்டு உள்ளம் களித்த அந்த உன்னதக் கலைஞன் பாபரைப் பார்த்து, “சக்கரவர்த்தியவர்களே, கன்றை நடுகின்றவர்கள் அது வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கனிந்த பிறகே பயனைக் கொள்வார்கள். நான் கன்றை நடும்போதே தங்களிடமிருந்து பரிசைப் பெற்றுவிட்டேன். பிறர் நலம் பெற நாம் செய்ய முனையும் செயலே நமக்கு நலத்தைத் தரும் என்பதற்குத் தங்களது செயலே சான்று” எனக் கூறினான்.

இந்த உண்மையும் தம் வாழ்வில் நிகழ்ந்திருந்த பல அனுபவங்களும் சக்கரவர்த்தி பாபரின் நினைவில் பளிச்சிட்டன.

“ஆகா, எவ்வளவு உண்மையான தத்துவங்கள்!” எனத் தம் மனத்துக்குள் வியந்து, மீண்டும் ஒரு பொற்குவியலை வேடதாரியான தெனாலிராமனுக்கு அளித்தார்.

இந்த மட்டோடு வேடதாரிப் பக்கிரி நின்று விடவில்லை. “கனிவும் கருணையும் மிக்கவரே! மரங்களைச் சொந்தமாகக் கொண்டவர்கள் கூட ஆண்டிற்கு ஒருமுறைதான் அதன் பலனைப் பெறுவார்கள், நானோ இறைவன் இன்னருளாலும் தாங்கள் இதயக் கனிவாலும் இருமுறை பயனைப் பெற்று விட்டேன்” என்று சொல்லிப் பாபரின் உள்ளத்தைக் குளிர வைத்தான் பக்கிரி.

பாபர் மீண்டும் ஒரு பொற்குவியலை அவனுக்குப் பரிசாக வழங்கினார்.

இதன் பின்னர் பாபர், அங்குத் தங்குவதற்கோ தெனாலிராமனுடன் பேசுவதற்கோ விரும்பவில்லை. அந்தப் புத்திக் கூர்மையுள்ளவன் அரிய கருத்துக்களைக் கொண்ட இனிய மொழிகளைக் கூறித் தம்மிடமுள்ள பொற் குவியல்களையெல்லாம் பெற்று விடுவான் என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை!

அந்த இடத்தை விட்டுத் தம் மெய்க்காப்பாளருடன் சக்கரவர்த்தி புறப்படலானார். அப்போது அந்தப் பக்கிரியான தெனாலிராமன் பாபர் சக்கரவர்த்தி முன் வந்து, “எனக்காகச் சற்றுப் பொறுங்கள்” என்று வேண்டிக் கொண்டு தன் வேடத்தைக் கலைத்து, தான் யார் என்பதைக் காட்டி அவர் முன் நின்றான். யார் அது? தென்னகம் ஈன்ற முத்து தெனாலிராமன் என்பதைப் பாபர் உணர்ந்து கொண்டார்.

தன் அவையிலுள்ளவர்களுக்குத் தெனாலியின் கலைச் சுவையை ரசித்துப் பாராட்டக்கூடாது என்று கடுமையான கட்டளை வழங்கிய அவரே, இப்போது கலைக்கு ஆட்பட்டுப் போனார். இனி மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

பாபர் தெனாலிராமனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து “கலைக்கு இடம், ஆள், இனம், மொழி என்று எதுவும் இல்லை. நீ பிறவியிலேயே நகைச்சுவைக் கலைஞன். குயிலுக்கு யாரும் கூவக் கற்றுக் கொடுப்பதில்லை. மயிலுக்கு யாரும் ஆடப் பயிற்சி அளிப்பதில்லை. மீன் குஞ்சுக்கு நீந்த யாரும் பழக்குவதில்லை. இவற்றைப் போலவே நீயும்  கலையைக் கொண்டு பிறந்தவன்” என்று சொல்லித் தம் மெய்க்காப்பாளரிடம் இருந்த பொற்குவியல்களையெல்லாம் தெனாலிராமனுக்கு மீண்டும் கொடுத்து, ‘உன் திறமையையும் கலையையும் நான் மிகமிகப் புகழ்ந்து பாராட்டிப் பரிசளித்ததை உன் மன்னரிடம் போய்ச் சொல்’ என்று கூறி விடை கொடுத்தனுப்பினார்.

வடநாட்டில் தென்னாட்டின் புகழை நிறுவிய தெனாலிராமனை விஜயநகர வேந்தர் அன்பால் தழுவிக் கொண்டார். அவனுக்கு ஆயிரம் வராகனை அன்பளிப்பாய் அளித்ததோடு அரசவையிலும் பெருஞ்சிறப்புச் செய்தார்.

(கவிஞர் திரு தே. ப. பெருமாள் அவர்கள் எழுதிய ‘சிரிப்பூட்டும் தெனாலிராமன் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *