சிறுகதை: தலைக்குனிவு – நாரண. துரைக்கண்ணன்

“சார், யாரோ ஒரு கிழவர் வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கணுமாம்” என்று தெரிவித்தான் விடுதி வேலையாள்.

உடன்மாணவர்கள் சிலருடன் ‘செஸ்’ (சதுரங்கம்) ஆடிக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு வேலையாள் வந்து கூறியது காதில் விழவில்லை. அவ்வளவுக்கு ஆட்டத்தில் அவன் கவனம் ஈடுபட்டிருந்தது.

வேலையாள் இரண்டாம் தடவை உரத்துக் கூறிய பிறகுதான், சிதம்பரம் தலைநிமிர்ந்து  நோக்கினான்.

“யார், என்னையா?”

“ஆமாம், சார்…”

“யார் தேடி வந்திருக்காங்கன்னு  சொன்னாய்?”

“யாரோ ஒரு கிழவர்..”

“கிழவரா?”

“ஏன்? எவளேனும் குமரி யொருத்தி, தேடி வந்திருப்பாளென்று நினைத்தாயா?” என்று நண்பனொருவன் கிண்டல் பண்ணினான்.

இந்தக் கேலிப் பேச்சு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கியதாயினும், வெளிக்குக் கோபங் கொண்டவன்போல் பாவனை செய்து “சட்! உளறாதே!” என்று கடிந்து கொண்டான். பின் அவன் வேலையாளைப் பார்த்து, “அந்தக் கிழவன் யார்? எங்கிருந்து வந்தான்? எதற்காக என்னைப் பார்க்க வேண்டுமாம்? இதையெல்லாம் விசாரிக்காமல், யாரோ பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்ல வந்து விட்டாயே? முட்டாள்! வழியே போகிறவன் வருகிறவன் எல்லாம் பார்க்க வேண்டுமென்றால், உடனே நாங்கள் பேட்டியளிக்க வேண்டும். இதைவிட எங்களுக்கு வேறு வேலையில்லை என்பது உன் எண்ணமா?…” என்று அதிகார தோரணையில் கேட்டுத் தடபுடல் பண்ணினான்.

வேலையாள் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் சிதம்பரம், “சரி, சரி; போய் அந்த ஆளை அழைத்து வா, நீ ஒன்றும் சமாதானம் சொல்ல வேண்டாம்” என்று சொன்னான்.

விடுதி வேலையாள், சிதம்பரத்தைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்து அனுபவப்பட்டவன். ஆதலால், அவன் சிதம்பரத்தின் தடபுடலுக்குச் சிறிதும் அஞ்சாமல், சாவதானமாகவே பதில் கூறத் தொடங்கினான். “இல்லை, சார்; நான் அதெல்லாம் கேட்காமையா, உங்களிடம் வந்து சொல்லுவேன்னு நினைச்சீங்க? கந்தசாமி உடையாருன்னா நீங்க தெரிஞ்சிக்குவீங்கன்னு சொன்னார். உங்க ஊரிலேயிருந்துதான் வாறாராம். முகஜாடையை பார்த்தா உங்க அப்பாவா யிருக்குமோன்னு…!”

சிதம்பரம் பதட்டத்துடன், “நிறுத்துடா, உன் அதிகப் பிரசங்கத்தை! போ; அந்தக் கிழவனை நானே போய்ப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே கூப்பிட்டு வரவேண்டாம்!” என்று உரைத்தவாறே, கையிலிருந்த கழற்காயைப் போட்டுவிட்டு எழுந்தான்.

“என்ன சிதம்பரம், ‘கேமை’ நடுவே விட்டுவிட்டுப் போகிறாய்?…”

“எவனோ ஊரிலிருந்து வந்திருக்கான்னு சொன்னதுமே ஓடுகிறாயே!”

“பியூன் சொன்னானே, இவன் அப்பாபோல இருக்கிறது என்று. அதாண்டா அலறியடித்துக்கொண்டு ஓடறான். ‘பாதர்’னா பாசம் இருக்காதாடா!”

இவ்விதமாக, சகாக்கள் சிதம்பரத்தைக் ‘கோட்டா’ பண்ணினர்.

சிதம்பரம் எரிச்சலோடு “எந்தப் ‘புரூட்’டோ, பார்த்து விட்டு வருகிறேன். பிரதர்! ஒரே நொடியில் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு விரைந்து வெளியேற முயன்றான்.

இதற்குள் வேலையாள் குறிப்பிட்ட கிழவர், “சிதம்பரம் சிதம்பரம்..! எங்கே இல்லையா, பிள்ளையாண்டான்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே அடியெடுத்து வைத்தார். அவர் கையில் பிடித்து, ஊன்றி வந்த தடி, ‘தட், தட்’ எனச் சப்தம் செய்தது.

கிழவரைக் கண்டதுமே, சிதம்பரம் திகைத்து நின்றுவிட்டான். அவன் முகத்தில் குபீரென ரத்தம் ஏறியது. வந்த கிழவர் அவனுடைய தந்தைதான். வேலையாள் பெயரைச் சொன்னபோதே, சிதம்பரம் தன் தகப்பனார்தான் வந்திருக்கிறார் எனத் தெரிந்து கொண்டானாயினும், நேரில் பார்த்ததுமே எதிர்பாராததொன்றைக் கண்டதுபோல் அதிர்ச்சி கொண்டான். ஏனென்றால், அவன் இருக்கும் டாம்பீக நிலைக்குப் பட்டிக்காட்டு ஆளாகப் பஞ்சைக் கோலத்தில் தந்தை வந்திருப்பதை அவமானமாகக் கருதினான். அவன் அஞ்சியதுபோலவே, அவனுடைய சினேகிதர்கள், கிழவர் முழங்காலுக்கு மேல் வேட்டியும், உடம்பில் குருத்தாவும், தலையில் ஐதர் காலத்துப் பாகையும் உடுத்தியிருந்ததையும், காதுகளில் சிவப்புக்கல் கடுக்கனும், இடக்கை விரல் ஒன்றில் பஞ்ச லோகத்தாலாகிய மோதிரம் அணிந்திருந்ததையும் கண்டு நையாண்டி செய்து கொண்டிருந்தனர்.

இந்த அவமான உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஆத்திரத்தை எழுப்பியது. “யாரது?” என்று அதட்டலுடன், கிழவர் உள்ளே வருவதைத் தடுத்து நிறுத்துவதுபோல், எதிரே  போனான்.

“நான்தான் அப்பா!” என்று குழைவுடன் கூறிய கிழவர், “சிதம்பரமா, அது?” என்று கேட்டவாறு தடியை இடக்கையில் மாற்றிக்கொண்டு வலக்கையை நெற்றிமேல் வைத்து நிமிர்ந்து சிதம்பரத்தைப் பார்க்கலானார்.

“ஆமாம், இவர்தான். இவரைத்தானே நீங்க கேட்டீங்க, பெரியவரே?” என்று கதவண்டை நின்றிருந்த வேலையாள் கேட்டு, ஆளை இனங்காட்டினான்.

“நீ போய் உன் வேலையைப் பாருடா!” என்று சிதம்பரம் அவன் மீது சீறி விழுந்தான். ‘அறிமுகப்படுத்த வந்து விட்டான்’ என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டு, தகப்பனாரைப் பார்த்து, “சரி, சரி; இப்படி வா” என்று தன் அறைக்குள் கூப்பிட்டுக்கொண்டு போனான். மகனின் வெடுவெடுப்பைக் கவனியாத கந்தசாமி உடையார் அவன் பின்னே தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார்.

தன் அறையை அடைந்ததுமே சிதம்பரம் கதவைத் ‘தடா’லெனச் சாத்தினான். அவன் கோபம் உச்ச நிலையை அடைந்திருந்தது. கண்ணாலேயே எரித்து விடுபவன்போல் தகப்பனாரைப் பார்த்து, “என்ன சமாச்சாரம்? ஏன் இங்கே வந்தாய்?” என்று கேட்டான்.

இக்கேள்வி கந்தசாமி உடையாரை ஒருகணம் திகைக்க வைத்தது. பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு “கண்ணிலேயே இருந்தது; பார்க்கலாமென்று வந்தேன்” என்று தயக்கத்துடன் சொன்னார்.

“இப்போது பார்த்தாயிற்றோ, இல்லையோ?”

“ஏனப்பா, இப்படிப் பேசுகிறாய்?”

“பின்னே என்ன? இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று என்று எண்ணி ஊரிலிருந்து ஓடி வந்தாய்?”

“உன்னைப் பார்க்க வரக்கூடாதா?”

“என்னை என்ன பாக்கிறது என்கிறேன்? நான் கரைந்து போய் விட்டேனா, அப்படியே இருக்கிறேனா என்றா பார்க்க வந்தாய்?”

“என்ன சிதம்பரம், என்னென்னவோ பேசுகிறாயே?”

“நான் எத்தனை தரம் உனக்குச் சொல்லியிருக்கிறேன். என்னைப் பார்க்க இங்கே வராதே என்று. அதைக் கேட்காமல் வந்து என் மானத்தை வாங்குகிறாயே!”

“நான் உன்னைப் பார்க்க வருவது உனக்கு அவமானமாகவா இருக்கிறது? அப்படியானால் இனிமேல் நான் வரவில்லை அப்பா!”

“நீ அடிக்கடி வந்து பார்த்தால்தான், பிள்ளைமேலே உருகிப் போகிறாய் என்று மற்றவர்களுக்குத் தெரியும் போலே இருக்கு…”

“மனசு கேட்காமல் பிள்ளையைப் பார்க்கிறது கூடவா குற்றம்? அட கடவுளே!” என்று கிழவர் தலையில் அடித்துக்கொண்டார். கைத்தடி நழுவி விழுந்தது. அவர் சிரமத்துடன் அதைக் குனிந்து எடுக்கலானார். இந்நிலை சிதம்பரத்தின் கோபத்தை ஓரளவு தணிக்கத்தான் செய்தது. “நான்தான் அடிக்கடி கடிதமெழுதுகிறேனே! லீவு விடுகிற போதெல்லாம் ஊருக்கு வருகிறேன். அப்படியிருக்க…” என்று மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

“எல்லா லீவுக்கும் எங்கே அப்பா வந்தாய்?.. ஊம்… அதெல்லாம் சொன்னால் கூட உனக்குக் கோபம் வரும். தசரா, பொங்கல் பண்டிகைக்குக்கூட நீ ஊருக்கு வராமற் போகவேதான், என்னமோ ஏதோ என்று எங்கள் மனது அடித்துக் கொண்டது… அவள் வேறே நச்சரித்துக் கொண்டிருந்தாள், ‘போய்ப் பார்த்து விட்டுவா! போய்ப் பார்த்து விட்டுவா!’ என்று. அத்துடன் உனக்குப் பெண் கொடுக்க நம் உறவின் முறையார் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் சொல்லி விட்டுப் போகலாம் என்று எண்ணி வந்தேன்…”

சிதம்பரத்துக்கு மீண்டும் கோபமுண்டாயிற்று. “எனக்குத் தெரியுமே! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இப்போது யாரையோ தூது விட்டுப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கு போலிருக்கு. அதற்கு என்னைச் சரிக்கட்டத்தானே வந்தாய்? இதை முதலில் சொல்லாமல், ‘கண்ணிலேயே இருந்தது; மனசு அடித்துக் கொண்டது; அம்மா பார்த்து விட்டு வரச்சொன்னாள்’ என்றெல்லாம் ஏன் கதை அளந்தாய் என்று கேட்கிறேன். என் கலியாணத்தைப் பற்றிப் பேச்சு எடுக்காதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்? கலியாணம் செய்து கொள்ளப் போகிறவன் நானா, நீங்களா? எப்போது பண்ணிக் கொள்கிறது என்று எனக்குத் தெரியும். பெண் பார்க்கிற துன்பம் கூட உங்களுக்கு வேண்டாம்… நான் சொல்லுகிறது தெரிகிறதா…? ஆமாம்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளினான்.

கிழவர் அப்படியே அசந்து நின்று விட்டார்.

“சரி, இவ்வளவுதானே சேதி? இனி நீ போய் விட்டு வரலாம். எனக்கு ரொம்ப வேலை இருக்கிறது…” என்று அவரை வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் நோக்கத்தோடு அவசரத்தைக் காட்டிப் பேசினான்.

“சரி, அப்பா; நான் போய் வருகிறேன். எனக்காக நீ ஒன்றும் கஷ்டப்படாதே, அப்பா! உன் ஜோலியைப் போய்ப் பாரு” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடக்கலானார்.

தகப்பனார் வருத்தத்துடன் போவதைப் பற்றி, சிதம்பரம் லட்சியம் செய்யவில்லை. அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, சினேகிதர்கள் இருக்கும் அறைக்கு விரைந்து சென்றான்.

கந்தசாமி உடையார் தம்மைக் கடந்து முன்னே போகும் மகனை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே நடக்கலானார்.

சிதம்பரம் கதவைத் திறந்து கொண்டு வந்த ஓசையைக் கேட்டு, ‘செஸ்’ ஆடிக் கொண்டிருந்த சினேகிதர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.

“சிதம்பரம் வந்து விட்டான், ஜார்ஜ்! ஆட்டத்தைப் புதுசாகத் தொடங்குவோம், என்ன?” என்றான் ஒருவன்.

“ஆமாம்; வந்தது யாருடா? உங்க அப்பாவா? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே! என்னவாம் சமாச்சாரம்?” என்று கேட்டான் சுதர்சனம்.

“ஒன்றுமில்லை, எங்க அப்பா கழனிக்கு ஒரு ‘பம்பிங் மெஷீன்’ வாங்கியனுப்பச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டிருக்கிறார்” என்று சிறிதும் தயங்காமல், சமயோசிதமாகப் பதிலளித்தான்.

“அப்படியானால், வந்த ஆள் உங்க அப்பா இல்லையா?”

“என்னடா, மடையன் மாதிரி உளறுகிறாய்? எங்கள் பண்ணையாளைப் போய் அப்பா என்கிறாயே!”

அப்போதுதான் அந்த அறையைக் கடந்து போய்க் கொண்டிருந்த கந்தசாமி உடையாரின் காதில் சிதம்பரம் சொல்லிய இச்சொல் விழுந்தது. அவர் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். தம்மைச் சமாளித்துக் கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. “நான் பண்ணையாளாமே? – ஆமாம்; அவன் இருக்கிற ‘டீக்’குக்கு என்னை அவன் அப்பா என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகத்தான் இருக்கும்?” என்று அவர் தாமாகவே சொல்லிக்கொண்டு நடக்கலானார்.

கந்தசாமி உடையாருக்குக் கொஞ்சத்தில் மனம் ஆறுதலடையவில்லை. மகனைப் பார்க்கப்போன இடத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும் அவமானத்தையும் அவர் வழிநெடுக எண்ணிக்கொண்டே போனார். ‘அந்தக் கல்லூரியில் படிக்கிறவர்கள் எல்லாம் சீமான் வீட்டுப் பிள்ளைகள்தானா? என்னைப்போல ஏழைகளின் பிள்ளைகள் ஒருவர்கூடப் படிக்கவில்லையா? அவர்களைப் பார்க்க பெற்றோர் வருவதில்லையா? அப்படி வருபவர்கள் எல்லாம் பகட்டும் படாடோபமுமாகவா இருப்பார்கள்?’ இக்கேள்விகள் அவருடைய நொந்த உள்ளத்திலிருந்து எழலாயின.

‘என்ன காலம் இது? மேனாட்டுப் படிப்பும் நாகரிகமும், பெற்ற தகப்பனைப் பண்ணையாள் என்று சொல்லச் செய்கின்றன. இப்படி என்னைச் சொல்வதற்குத்தானா இவனை இவ்வளவு தொல்லைப்பட்டுப் படிக்க வைத்து வருகிறேன்? எப்படி இருந்தவன் எப்படி ஆய்விட்டான்! காலேஜ் படிப்பும் பட்டண வாசமும் ஆளை அடியோடு மாற்றி விட்டனவே! பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு ஆவலாக வந்தேன்? பரிவோடு பார்க்க வந்த தகப்பனை, ‘வா, அப்பா!’ என்று அன்புடன் வரவேற்று உபசரித்தானா? ‘ஊரில் அம்மா எல்லாம் சௌக்கியமா?’ என்று ஆதுரத்துடன் விசாரித்தானா? ஊகும்; – இதெல்லாம் கேட்காமல் போனாலும் பரவாயில்லை. ‘ஏன் இங்கே வந்தாய்?’ என்றல்லவா கேட்டான்? இப்படிக் கேட்க அவனுக்கு மனம் எப்படி வந்தது? பெற்று வளர்த்த தகப்பன் வந்து பார்க்கிறதை அவமானம் எனக் கருதுகிறவன் – தந்தையைச் சிநேகிதர்களுக்கு ‘எங்கள் பண்ணையாள்’ எனச் சொன்னவன் – ‘ஏன் வந்தாய்?’ என்று மட்டுந்தானா கேட்பான்? அதற்கு மேலும் கேட்பான். ஊம்; இவனை ஆளாக்க – படிக்க வைத்துப் பெரியவனாக்க – என்ன பாடுபட்டேன்? – எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன்…?

இவ்விதம் எண்ணியபோதே அவர் கண்களில் நீர் நிரம்பி வழிந்தோடியது.

கந்தசாமி உடையார் சிதம்பரத்தை வளர்க்கச் சிரமப்பட்டதைப் போல, பாடுபட்டவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். அவருக்குச் சிதம்பரம் மட்டும் பிள்ளையாய் இருந்திருந்தால், ‘ஒரே பிள்ளை; அதனால்தான் அருமையாக வளர்க்கிறார்’ என்று சொல்லலாம். அவருக்கு அவன் மட்டுமல்ல; மற்றும் இரு ஆண்களும், நான்கு பெண்களும் இருக்கின்றனர். அப்படியிருந்தும், அவர் அவன் விஷயத்தில் மட்டும் எல்லா வகையிலும் விசேட சிரத்தை காட்டி வரலானார்!

கந்தசாமி உடையார் ஏழையானாலும் கல்விச் செல்வம் வாய்ந்தவர். நல்ல தமிழ் இலக்கியப் புலமை அவருக்கு இருந்தது. அதனால் அவர் பண்ணுருட்டி மக்களால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். ஊர் நாட்டாண்மைக்காரர் உட்பட எல்லோரும் உடையாரிடம் மரியாதை காட்டி வந்தனர். அவருடைய நற்பண்பும் நல்லொழுக்கமும் பிறரை வெகுவாகக் கவர்ந்தன.

கந்தசாமி உடையார் மண்பாண்டங்கள், பொம்மைகள் செய்து விற்று, அதன் வருவாயைக்கொண்டு குடும்பத்தையும் கௌரவமாக நடத்தித் தம் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து வந்தார். அவர் சம்பாதனையில் பெரும்பகுதி சிதம்பரத்தின் படிப்புக்குத்தான் செலவாயிற்று. அவனை ஆங்கிலக் கல்வியில் உயர்தரப் பட்டம் பெறச்செய்து, சர்க்கார் உத்தியோகத்தில் தகுந்தபடி அமர்த்தவேண்டுமென்பது அவருக்கு ஆசை. அதனாலேயே, தள்ளாமையினால், முன்போல அதிகமாகச் சம்பாதிக்க முடியாமலிருந்தும், நகை நட்டுகளை விற்றும், நில புலங்களை அடமானம் வைத்தும், சிதம்பரத்தைச் சென்னைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

இவ்வளவு ஆசாபாசத்துடன் சிரமப்பட்டுப் படிக்கவைத்த பிள்ளை தம்மைத் தகப்பனென்று சொல்ல வெட்கப்படுகிறானென்றால் – ‘ஏன் வந்து மானத்தை வாங்குகிறாய்?’ என்று கேட்கிறானென்றால், – அதை அவரால் எப்படிப் பொறுக்க முடியும்? இந்தப் பட்டிக்காட்டுத் தந்தையில்லாமல், இவன் எப்படிப் பட்டணத்திலே பட்டப் படிப்புப் படிக்க வந்து விட்டான்? இவன் சொன்னபடி பண்ணையாள் போன்றிருக்கும் என்னுடைய பணத்தைக் கொண்டுதானே சீமான்களின் பிள்ளைகளோடு சீமானாய்  உலவி வருகிறான். நான் ஒருமாதம் பணம் அனுப்பா விட்டால் இவன் ஜம்பமும் டாம்பீகமும் என்னாகும்? ஊம்; இருக்கட்டுமே…” என்று அவர் தமக்குள் கறுவிக் கொண்டார்.


வேங்கடாசல உடையார் பங்களாவில் நடந்த திருமண வைபவம் புதுச்சேரி முழுவதுமே கலகலப்பை உண்டு பண்ணியது. பொதுவாக, கலியாணச் சிறப்பைப் பற்றியும், அதன் ஒவ்வொரு அம்சத்தைக் குறித்தும் அதில் கலந்து கொண்டவர்களும், அதற்குப் போகாமலே கேள்விப்பட்டவர்களும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

வேங்கடாசல உடையார் தமது ஒரே மகளுக்கு அவ்வளவு சிறப்பாக விவாகஞ் செய்வித்துப் பெருமகிழ்ச்சி கொண்டார். அவர்கள் சாதியிலேயே முதன் முதலாகப் பாடசாலைகளின் மேற்பார்வையாளராக அரசாங்கப் பணியில் அமர்ந்திருக்கும் சிதம்பரம் அல்லவா இவர் மகளுக்குக் கணவனாக வாய்த்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட உயர்ந்த சம்பந்தம் எளிதில் கிடைக்கக் கூடியதா? அந்தச் சிறப்பைக் கொண்டாட எவ்வளவு செலவு செய்தால் என்ன? இந்தப் பெருமித எண்ணத்தோடுதான் வேங்கடாசல உடையார் தம் பெண் திருமணத்திற்குத் தாராளமாகச் செலவு செய்து பலரையும் வியப்படைய வைத்தார். அந்த ஊரில் செல்வமும் செல்வாக்கும் உடைய ஒரு சிலரில் வேங்கடாசல உடையார் குறிப்பிடத்தக்கவர்; ஆதலால், இவர் வீட்டுக் கலியாணத்துக்குப் புதுச்சேரி கவர்னர் உட்பட அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் வந்திருந்ததில் ஆச்சரியமில்லை. கந்தசாமி உடையார், சிதம்பரம் இருவரின் சார்பிலும் முறையே அநேக பெரிய மனிதர்களும், சிநேகிதர்களும் வந்திருந்தனர்.

வரவேற்பு இசையரங்க நிகழ்ச்சிக்கென்றே மிகப் பெரியதாகப் போடப்பட்ட தனிப் பந்தலில் அன்று மாலை இசைவாணி சண்முகவடிவினுடைய இனிய இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மணமகனும், மணமகளும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர் விமான மொன்றில் உட்காரவைக்கப் பட்டிருந்தனர். அவர்களை முன்னிலையாகக் கொண்டுதான் பாடகி கச்சேரி செய்து கொண்டிருந்தாள்.

சிதம்பரம் மகிழ்ச்சியே உருவாக மணமகள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் அடைய வேண்டிய சகல சம்பத்தையும் தான் அடைந்து விட்டதாக அவன் உள்ளம் கொண்டிருந்த பூரிப்பு அவனுடைய முகத்தில் நன்கு காணப்பட்டது. அவனுக்கு உயிர் நண்பர்களும், உத்தியோகத்தில் நெருங்கிய தொடர்புடையவர்களும், வரவேற்புக்கு வரும் போதும் போகும்போதும் அவனை அணுகித் தங்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் தெரிவித்துக் கைகுலுக்கி விட்டுப் போய்க் கொண்டிருந்தனர்.

கச்சேரி அருமையாக நடந்து கொண்டிருந்தது. விருந்தினர்கள் பாடகி பாடும் இன்னிசையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். விருந்தினர்களுக்கு மின்சார விசிறிகள் வாயிலாக வரும் காற்றுப் போதாதென்று, பணியாட்கள் வேறு பெரிய பெரிய கைவிசிறிகளைக்கொண்டு விசிறி, காற்று வரச் செய்து கொண்டிருந்தனர்.

இச்சமயத்தில் விருந்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த வேங்கடாசல உடையார், தற்செயலாக எதையோ கவனித்து விட்டுத் தாம் நின்றிருந்த இடத்தை விட்டுப் பதறியோடி வந்தவராய், “அண்ணா, என்ன இது? என்ன வேலை செய்கிறீர்கள்…?” என்று கேட்டவாறு மணமக்கள் இருக்கும் பக்கமாக நின்று பெரிய விசிறியொன்றைப் பிடித்து விசிறிக் கொண்டிருந்த கிழவர் ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டார். அப்போதுதான் எல்லோரும் அந்த மனிதரைப் பார்த்தனர். சிதம்பரமும் அச்சமயத்தில்தான் நோக்கினான். உடனே அவன் முகம் கறுத்து விட்டது. அவ்விடத்தில் விசிறியெடுத்து விசிறிக் கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை. அவனுடைய தந்தையேதான்! அவர் முழங்காலுக்கு மேல் வேட்டியும் தலையில் முண்டாசும் கட்டிக்கொண்டிருந்தார். உடம்பில் சட்டை எதுவுமில்லை. மற்ற வேலையாட்களாயினும் இடத்துக்குத் தகுந்தபடி நல்ல உடை யுடுத்திக்கொண்டிருந்தனர். அதுகூட இல்லாமல் குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை உழவனைப்போன்ற தோற்றத்தில் அவர் காணப்பட்டார். இக்கோலத்தைக் கண்டு எல்லோருமே திகைப்புற்றனர்.

வேங்கடாசல உடையாரைப்போலவே, மற்றும் பலர் அவரை அணுகி, அவர் கையிலுள்ள விசிறியைப் பிடுங்கி, அவரை விசிறவொட்டாமல் தடுக்க முயன்றனர். இதற்குள் அவருடைய சின்னப் பிள்ளைகள் இருவரும் தகவலறிந்து ஓடிவந்தனர்.

மூத்தவன், “அப்பா, என்ன இது! சட்டையையெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு வந்து, இப்படி நிற்கிறீர்களே! உங்களை யார் விசிறச் சொன்னது?” என்று கேட்டான்.

“இதுவரை எங்கே இருந்தீர்கள்? சாயங்காலத்திலிருந்து உங்களை எங்கெங்கெல்லாம் தேடுகிறோம்?” என்று இளையவன் வினவினான்.

கந்தசாமி உடையார் கச்சேரி தொடங்குமுன்பே, பணியாட்களோடு பணியாளாய்க் கலந்துகொண்டார் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது.

இளையவன் அவருடைய சட்டை, மேலாடை முதலியவற்றை எடுத்துவர ஓடினான்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் கந்தசாமி உடையார் சிறிதும் சலனமுறவில்லை. அவர் மிக அமைதியாக, “ஏன்? நான் என்ன செய்கிறேன்? நான் செய்ய வேண்டிய பணியையன்றோ செய்கிறேன்! இதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?” என்று வினவினார்!

வேங்கடாசல உடையார், “நீங்கள் செய்யக் கூடிய பணியா இது, அண்ணா! சம்பந்தியாக உள்ள நீங்கள்…” என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே போனார்.

அவரைத் தொடர்ந்தே மற்றுஞ் சிலர் “ஆமாம் அண்ணா! நீங்கள் இப்படிச் செய்யலாமா?….” என்று கூறி அங்கலாய்த்தனர்.

“நான் சம்பந்தியா? யார் சொன்னது…? நான் மாப்பிள்ளை வீட்டுப் பண்ணையாள் ஐயா! இது உங்களுக்குத் தெரியாதா? இதுவரை இதை யாரும் உங்களுக்குச் சொல்லவில்லையா?….” என்று கூறிவிட்டு, கந்தசாமி உடையார் சிதம்பரத்தைக் குறும்பாக நோக்கி, “என்ன மாப்பிள்ளை, நீங்கள்தான் இவர்களுக்குச் சொல்லுங்கள், நான்…” என்று கூறி, மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

இதைக் கேட்டவுடனே பக்கத்திலிருந்த இரண்டாவது மகனுக்கு உண்மை புரிந்து விட்டது. கந்தசாமி உடையார் முன்பு சிதம்பரம், சக மாணவர்களிடம் தம்மைப் ‘பண்ணையா’ளென்று சொன்ன சேதியைச் சொல்லி வருத்தப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. அண்ணன் செய்த தவற்றைத் தக்க சமயத்தில் சுட்டி இடித்துக்காட்டுகிறார் என்று உணர்ந்த அவன், நிலைமை இன்னும் மோசமாய் விடக்கூடாதென்று எண்ணி, “என்ன அப்பாவுக்கு இருந்தாற்போலிருந்து புத்தி பேதலித்து விட்டது!” என்று சமயோசிதமாகக் கூறிக்கொண்டே, “வா அப்பா!” என்று கூப்பிட்டவாறு அவரைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போய் விட்டான்.

சிதம்பரத்தின் நிலைமையோ  பரிதபிக்கத் தக்கதாயிருந்தது. தந்தை கூறிய ஒவ்வொரு சொல்லும் கூரிய வேல்போல் அவனுள்ளத்தை ஊடுருவிச் சென்றது. அவர், ‘நான் மாப்பிள்ளை வீட்டின் பண்ணையாள்’ என்று சொன்னபோது, ‘பண்ணையாள்’ என்பதை அழுத்திச் சொன்னதுமே, நாலு வருடங்களுக்கு முன், தான் தன் உடன்மாணவர்களிடம், ‘எங்கள் பண்ணையாள்’ என்று தன்னைப் பார்க்க வந்த தகப்பனை அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வந்தது. “பெற்ற தகப்பனுக்கு எவ்வளவு பெரிய அபசாரம் செய்து விட்டோம். அவர் உள்ளத்தை எவ்வளவு புண்படுத்தி விட்டோம்” என்பதை அவன் அந்தச் சமயத்தில்தான் உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவனையறியாமல் அவன் கண்களில் நீர் ததும்பியது. காரணம் புரியாத மணமகள், கணவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். அவளுடைய பார்வையிலிருந்து தப்ப, அவன் தலையைக் குனிந்துகொண்டான். குனிந்த தலை நிமிரவேயில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *