சிறுகதை: நல்ல அரசர் – அ. நடராசப் பிள்ளை

தமிழ்நாட்டின் ஒரு  பிரிவாகிய பாண்டிய  நாட்டிற்குத் தலைநகர் மதுரை. இக்கதை நடந்த காலத்தில் அரசு செலுத்திய பாண்டிய மன்னர் நல்ல அறிவுடையவர். குடிகளிடத்தில் மிகுந்த அன்பு உடையவர். அவர்களுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை மட்டும் வரியாக வாங்கினார். வரிப் பணத்தை எல்லாம் குடிகளுடைய நன்மைக்கே செலவழித்தார். அவர் சொந்தச் செலவுக்குச் சிறிது பொருளே எடுத்துக் கொள்வார். அவர் நகரின் எல்லா பக்கங்களிலும் உடல் நலப் பாதுகாப்பு முறைகளைச் செய்து வந்தார். அவர் மக்களுக்குள்ளே பொய்யும், களவும், கொலையும் நடக்க விடாமல் தடுத்தார். அவருக்கு குடிகளுடைய எண்ணத்தைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல் உண்டு, ஆகையால் அவர் நாள்தோறும் இரவு வேளையில் உருமாறி நகரச் சோதனைக்குப் போய் வருவார்.

ஒருநாள் இரவு அவர் நகரச் சோதனைக்குப் போனார். அப்பொழுது அவர் சேவகனைப் போல் உடையுடுத்தியிருந்தார். அவர் பல தெருக்களைச் சுற்றி வந்தார். சந்து பொந்துகளையும் நுழைந்து பார்த்தார். ஏழைகள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தார். பிறகு, அந்தணர்கள் வாழும் தெருவிற்குப் போனார். அந்தத் தெருவில் ஐம்பது வீடுகள் இருந்தன. அவ் வீடுகளில் வாழும் அந்தணர்கள் எல்லாரும் மிகுந்த ஏழைகள்; ஆயினும் நன்றாகப் படித்தவர்கள்; கடவுளிடம் அன்புள்ளவர்கள். அரசர் சென்றபோது வீடுகளெல்லாம் மூடப்பட்டு அரவம் இல்லாமல் இருந்தன. தெருக்கடைசியில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் இருவருடைய பேச்சுக்குரல்கள் கேட்டன.

அரசர் அந்த வீட்டினுடைய சுவர் ஓரத்தில் போய் நின்றார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதுகொடுத்துக் கேட்டார். அவ் வீட்டுக்காரனும், அவனுடைய மனைவியும் அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரன் மறுநாள் கங்கை நீராடுவதற்குப் புறப்பட முடிவு செய்திருந்தான். அவனுடைய மனைவி “நீங்கள் போய்த் திரும்பும்வரை என்னைக் காப்பாற்றுவோர் யார்?” என்று, தன் கணவனைக் கேட்டாள். அதற்கு அவன், “நம்முடைய நல்ல அரசர் உன்னைக் காப்பாற்றுவார்” என்று நவின்றான்.

அரசருக்கு இதைக் கேட்டவுடனே  பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. அரசராகிய தம்மைக் குடிகள் தந்தையைப் போல நம்பி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு அந்த இடத்தைவிட்டு அரண்மனைக்குப் போனார்; படுக்கையில் படுத்து நன்றாய்த் தூங்கினார்.

மறுநாள், அரசர் படுக்கையைவிட்டு எழுந்தார். உடனே, முதல்நாள் இரவு நடந்த செய்தி அவருடைய நினைவிற்கு வந்தது. அவர் கங்கையாற்றில் நீராடச் சென்ற பார்ப்பனர் திரும்பும் வரை அவருடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார். ஆனால், அவருக்கு மட்டும் அரிசி, பருப்பு முதலிய உணவுப் பொருட்களை அரசர் கொடுத்தால் கங்கையாடப்போன அந்தணனைப்பற்றி இவர் அறிந்திருப்பது வெளிப்பட்டுவிடும் என்று நினைத்த அரசர், அத் தெருவில் உள்ள ஐம்பது வீடுகளுக்கும் அரிசி, பருப்பு முதலிய சாமான்களை நாள்தோறும் கொடுத்துவரும்படி அமைச்சருக்குக் கட்டளையிட்டார். மேலும், அவர் நாள்தோறும் இரவு வேளையில் உருமாற்றத்துடன் அவ்வந்தணன் வீட்டைக் காவல் காத்து வந்தார்.

இப்படியாகப் பல நாள்கள் கழிந்தன. ஒரு நாள் இரவு அந்த அந்தணன் வீட்டில் ஆள் குரல் கேட்டது. அரசர் அதைக் கேட்டுத் திடுக்கிட்டார். தம்மை நம்பிப் போன அந்தணன் வீட்டில் ஆள் குரல் கேட்பது அவருக்கு மிகுந்த கவலையை உண்டாக்கியது. அவர், அக் குரலுடையவன் நல்லவனோ, கெட்டவனோ என்று தெரியாமல் வருந்தினார். பாண்டிய மன்னர் சிறிது நேரம் ஒற்றுக் கேட்டிருந்தால் உண்மை தெரிந்திருக்கும். வேறொருவனே அங்குப் பேசுவோன் என எண்ணி, உண்மையறிய வீட்டுக் கதவைத் தட்டினார். கங்கையாடச் சென்றிருந்த அந்தணன் அன்று பகல் வேளையிலேயே வந்துவிட்டான். ஆகையால் கதவைத் தட்டியவுடனே அவன் அதட்டிய குரலில் “யாரது?” என்று கேட்டான்.

அவனுடைய அதட்டிய குரலைக் கேட்டவுடனே அரசர்க்கு ஐயந் தீர்ந்து விட்டது. ஆனாலும், அந்தணனுக்குக் கதவைத் தட்டியவன் “யாரோ?” என்ற ஐயம் உண்டாகும் அல்லவா! அதற்காக அரசர் அத் தெருவில் உள்ள ஐம்பது வீட்டுக் கதவுகளையும் தட்டிக் கொண்டே அரண்மனை போய்ச் சேர்ந்தார்.

ஐம்பது வீடுகளின்  அந்தணர்களும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்கள். ஒருவருக்கொருவர் “கதவைத் தட்டியவர் யார்?” என்று கேட்டுக்கொண்டார்கள். யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அந்தணர்கள் “நல்ல அரசர் ஆளுகையிலும் இப்படிப்பட்ட வம்பர்கள் இருக்கிறார்களே?” என்று வருத்தப்பட்டார்கள்.

தன் வலக்கையை தன் வாளால் வெட்டும் அரசன்

அடுத்த நாள் காலை வேளை வந்தது. அந்தத் தெருவில் உள்ள  ஐம்பது வீட்டுக்காரர்களும் அரண்மனைக்குப் போனார்கள். அரசர் அவர்களை வரவேற்று இருக்கையில் இருக்கப் பணித்தார். அந்தணர்கள், நடந்த செய்தியை அரசரிடத்தில் தெரிவித்தார்கள். அரசர் அவ்வாறு தட்டிய வம்பனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களைக் கேட்டார். அவர்கள், “கதவைத் தட்டிக் கலவரப்படுத்திய கள்ளனுடைய கையை  வெட்டி விடவேண்டும்” என்று சொன்னார்கள். உடனே, அரசர் வாளை எடுத்தார். தம்முடைய வலக்கையை வெட்டினார். இரத்தம் வெளிப்பட்டு ஓடியது.

அந்தணர்கள் இதனைக் கண்டு நடுங்கினார்கள். பிறகு அரசர் அவர்களுக்கு நடந்த செய்திகளை எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவர்களுக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று. அவர்கள் யாவரும் அந் நகரத்தில் உள்ள சோமசுந்தரர் திருக்கோயிலுக்குப் போனார்கள். இறைவனை வணங்கி அந்த நல்ல அரசருக்கு அருள் செய்யும்படி வேண்டினார்கள். பிறகு அரசருடைய வெட்டுப்பட்ட வலக்கை பொன்கையாக வளர்ந்தது. எல்லாரும் அந்த வியப்புக்குரிய நிகழ்ச்சியைக் கண்டு சோமசுந்தரரை வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியால் இன்பக் கூத்தாடினார்கள். அது முதல் அந்த அரசரை எல்லாரும் பொற்கைப் பாண்டியர் என்று அழைத்து வந்தார்கள்.

(திரு. அ. நடராசப் பிள்ளை அவர்கள் எழுதிய, “செந்தமிழ் நாட்டுச் சிறுகதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *