சிறுகதை: பிழைப்பு – ரகுநாதன்

ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி ‘காத்துக் குடித்துவிட்டு’ வரவோ, பழைய புத்தகக் கடையில் பரிவர்த்தனை பண்ணவோ அல்லது மறுநாள் பாட்டுக்கு யாரிடமேனும் ‘அஞ்சு பத்து’ கைமாத்து வாங்கவோ, வரவேண்டிய கதைக்கு முன்பணமாக தவணை அச்சாரம் வாங்கவோ மனசும் இல்லை; வழியும் இல்லை. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்ற மாதிரி எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காப்பிதான். ஆனால், பாக்கெட்டில் அதற்கு வழி உண்டா என்றால், அது இனிமேல்தான் தெளிவுபட வேண்டிய விஷயம். என் பையில் ரூபாய்க் கலத்தில் காசு புரளும்வரை எனக்குக் கணக்கும் தெரியாது; கண்ணும் தெரியாது. கரன்ஸிச் செலாவணி என்ற நிலை பிறழ்ந்து காசுச் செலாவணியில் வரும்போதுதான் நான் கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பேன். ஆனால் தும்பைவிட்டு, வாலைப் பிடித்தால் முடியுமா?

பஸ் ஸ்டாண்டுக்கு வருமுன்னர் பையில் பஸ்ஸுக்கேனும் காசு இருக்கிறதா என்று துழவினேன். ஒண்ணே காலனாவுக்குமேல், ஒரு துரும்புகூட இல்லை. காபிக்குக் காசு இல்லை. ஆகவே இன்று வீட்டுக் காப்பிதான். ஆனால், அந்த ‘மூணே முக்கால் துட்டு’க்குச் செலவு வேண்டுமே!

ஆபீசிலிருந்து என் வீடு அதிக தூரமில்லை. குறுக்குப் பாதையாக நடந்து சென்றால், முக்கால் மைல் இருக்கும். பஸ்ஸில் சென்றால், ஒரு அணாக் காசுதான். இறங்கி நடந்துவிடலாம்.

பஸ்ஸில் சென்றால் ஒரு அணா; கால் அணா மிஞ்சும். ஆனால், இந்தக் காலத்தில் காலணா மிஞ்சுவதும் ஒன்றுதான்; மிஞ்சாமல் போவதும் ஒன்றுதான். பஸ்ஸில் செல்லாமல் பக்கத்து நாயர் கடையில் இரண்டு வில்ஸ் சிகரெட் வாங்கினால் அந்தக் காலணாவும் பயனுள்ளதாகப் போய்விடும். பையைத் துப்புரவாகத் துடைத்துவிட்டு சிகரெட்டைப் புகைத்தவாறே நடந்துவிடலாம். இந்தப் பணப் பெருக்கக் காலத்தில் காலணா என்ற நாணயம் வேறு எதனோடாவது ஒட்டிப் பிழைத்தால்தான் மதிப்புப் பெறமுடியும். காலணா மட்டும் தனித்தியங்க முடியாது. அப்போது அது செல்லாக் காசாக மாறிவிடும். ஆகவே அந்தக் காலணாவை வைத்துத் தர்மம் செய்யலாம்; அல்லது யானை வாயில் ஒதுக்கிவைத்த சுண்ணாம்புத் தேங்காய் மாதிரி சமயத்தை எதிர் நோக்கி, பர்ஸில் போட்டும் வைக்கலாம்…

இப்படியாக நான் சுய தர்ம விசாரணையில் மனம் கலங்கிச் சர்ச்சை செய்து கொண்டிருக்கும்போதுதான் என் காதில் அந்தப் பர தர்மம் விழையும் பரிதாபக் குரல் விழுந்தது.

திரும்பினேன்.

பஸ் ஸ்டாப்புக்கு அருகிலுள்ள பூவரச மர நிழலில் அந்தக் கிழவி ஓடியோடிக் கத்திக் கொண்டிருந்தாள்.

“அய்யாமாரே, அனாதைப் புணமுங்க; தூக்கிப் புதைக்கிறதுக்குக் கூட நாதியில்லைங்க. மவராசா, ஒரு காலணா தருமம் பண்ணுங்க” என்று பதறிப் பதறிக் கத்துவதும், அங்குக் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் மீது தலைவிரி கோலமாய் விழுந்து மாரடித்துக் கதறுவதுமாக இருந்தாள்.

நான் பார்த்தேன்.

மரத்தடியில் அந்தப் பையனின் பிரேதம் கிடந்தது. உடம்பு நீட்டி நிமிர்த்திக் கிடத்தப்பட்டிருந்தது. பெரு விரல்கள் இரண்டும் சடம்புக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. வாயின் கடையோரத்தில் உமிழ்நீர் வழிந்தோடியிருந்தது. கண்ணில் சந்தனம் அப்பப்பட்டிருந்தது. நெற்றியிலே ஈரம் கலையாத விபூதிப் பூச்சு!

அதைப் பார்க்கவே பரிதாபமாய்த் தானிருந்தது. மத்தியானம் நான் டீ குடிக்க வெளியில் வந்தபோது, அந்தப் பையனும்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்! அதற்குள்ளாகவா இந்த மரணம்? வேளாவேளைக்கு வயிற்றுக்கு உணவில்லாமல் அணு அணுவாய்ச் செத்து வருபவனுக்கு சாவு என்பது திடீரென்று கொதிநிலை அடைந்த தண்ணீரைப் போலத்தான் இருக்குமா? சே! என்ன அநித்யமான வாழ்வு? இந்தக் கிழவியும் மத்தியானம் தனக்கு வருகிற ஒன்றிரண்டு காசையும் அந்தப் பையனுக்கே தத்தம் செய்து விட்டாளே! அதற்குள்ளாகவா இந்த அவச்சாவு?…

பஸ் ஸ்டாண்டில் நின்றவர்கள் தரும சிந்தையோடு காலணா அரையணா போட்டார்கள். பிணத்தின்முன் விரித்திருந்த துண்டில் காசு சேர்ந்தது.

என்னாலும் தருமம் பண்ண முடியாமல் இருக்க முடியவில்லை. பர்ஸிலிருந்து காலணாவை எடுத்து விட்டெறிந்தேன். ‘கடைசிக் காசை ராஜாவைப் போல் செலவழி’ என்று சொன்ன இங்கர்ஸாலின் பொன்னுரை ஞாபகத்துக்கு வராவிட்டாலும், அடுத்தபடியாக நான் செய்த காரியம் காரில் ஏறியதுதான். ஆகவே, அந்த ஒண்ணே காலணாவை எப்படிச் செலவழிப்பது என்ற யோசனையும் தானே தீர்ந்துபோய் விட்டது.

காரில் சென்றபோதும், லஸ்ஸில் இறங்கி நடந்தபோதும் என் மனசில் ஒரே ஒரு சிந்தனைதான் மிஞ்சி நின்றது.

‘அவளுக்கும் அந்தப் பையனுக்கும் எந்தவித ரத்தபந்தமும் இல்லை; என்றாலும் அவள் ஏன் அந்தப் பிணத்துக்காக விழுந்து விழுந்து கதறவேண்டும்? மனித குணத்தின் நல்லுணர்ச்சியாலா? அதெல்லாமிருக்க முடியாது. மற்றவர்கள் இதயத்திலுள்ள கருணை, அன்பு, அனுதாபம் போன்ற நல்லுணர்ச்சிகளைச் சூறையிட்டு, அதன் மூலம் தனது வயிற்றைக் கழுவிக் கொள்ளவே அந்தக் கிழவி வழி பார்க்கிறாள். நானும்தான் என்ன செய்கிறேன்? எழுத்தாளன் என்ற சாக்கில் மனித உள்ளத்தில் கிடந்து தூங்கும் கருணையுணர்ச்சிகளைத் தூண்டி சமூகத்தின் கண்ணீரை வரவழைத்து காசு வாங்குகிறேன்! ஆனால் இந்தக் கிழவி இதற்கு முன்னெல்லாம் தனக்குக் கிடைக்கும் தர்மக் காசை இந்தப் பையன் இடையில் விழுந்து தட்டிக் கொண்டுபோய்விடுகிறான் என்பதற்காக, அந்த இடத்திலிருந்து அவனை விரட்டியடித்து, அந்த ‘வியாபார ஸ்தலத்தை, தனக்கே ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள நினைத்தாளே. ஆனால் இப்போதோ…?’

“தருமப் பிரபுக்களே, பெத்த வயிறு எரியுதய்யா! எம்புள்ளையைப் பார்க்க முடியலையே. ராசா! நீ போயிட்டியடா கண்ணு! உன்னை இப்படி அனாதைப் புணமாய் பார்ப்பதற்கா பெத்துப் போட்டேன். ஐயா, ஒரு காலணா கொடுங்க” என்று கதறினாள் கிழவி.

– பெற்ற வயிறா?

‘நிச்சயமாய் இருக்க முடியாது. அவளையும், அந்தப் பையனையும் நான் எவ்வளவோ காலமாக அறிவேன். அவர்கள் இருவரும் தாயும் பிள்ளையும் அல்ல. அவன் வேறு; அவள் வேறு. அதுமட்டும் நிச்சயம். இருந்தாலும் அவளும் பெண்பிள்ளைதானே. ஆயிரம்தான் தொழில் முறையில் விரோதங்கள் இருந்தாலும், அவளுக்கும் இருதயம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்? அவளும் மனுஷிதானே. தன் கண் முன்னே செத்து விழுந்த பையனைக் காணும்போது அவளுக்கு நெஞ்சம் கலங்காதா? அப்படியானால் பெற்ற வயிறு என்று சொல்லி ஏமாற்றுவதன் காரணம்? 

‘எத்தனையோ ‘தருமப் பிரபுக்களின்’ மனசுக்குள் உறுத்தும் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு அல்லது திருப்திப்படுத்தி என் எழுத்தின் மூலம் எனது பசியைத் தணித்துக்கொள்ள வழிபார்க்கிறேனே. அதுபோலவேதான் அவளும் பிழைப்பு நடத்துகிறாளா? அந்தப் பையனின் மரணத்தில்தான் அவளது ஜீவனம் நடக்க வேண்டுமா? ஏன், ஊரானின் சவத்தின்மீதுதான் உலகத்தின் பிழைப்பே நடக்கிறதா? ஒருவன் பிழைக்க வேண்டுமென்றால் இன்னொருவன் செத்து ஆகவேண்டுமா? அல்லது சாவதுதான் பிழைக்கிற வழியா?…

‘இல்லை, யாருமே சாகவேண்டியதில்லை; சாவதற்குக் காரணமாயுள்ள சமுதாய அமைப்புதான் சாகவேண்டும்! ஒருவனைச் சாகடித்து மற்றவன் வாழ விரும்பினால், முதலில் அவன்தான் சாகவேண்டும்!….

என் மனம் என்னென்னவோ அழிவுக் கோட்டைகள் கட்டி அலைக்கழிந்து கொண்டிருந்தது.

அன்றைக்குக்  காப்பி சுகப்படவே இல்லை;கஷாயம் மாதிரிக் கசந்தது.


இரவு படுக்கைக்குப் போன பின்னும் அந்தச் சிறுவனின் பிரேத உருவமே என் கண்முன் நின்றுகொண்டிருந்தது. ‘சாமி நேத்துக் காலையிலே நான் பிச்சை கேட்டப்போ. தரமாட்டேன்னியே. இப்போ நான் செத்துப் போய்ட்டேன். இனிமே உன் பிச்சையும் வேணாம். நீயும் வேணாம்’ என்று அவன் சொல்வது போல இருந்தது.

 எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.

அந்தக் கிழவியையும், பையனையும் நான் கொஞ்ச காலமா அறிவேன். எங்கள் ஆபீசுக்கு முன்னுள்ள பஸ் ஸ்டாண்டுதான் அவர்கள் வீடு, வாசல், குடியிருப்பு எல்லாம்.

கிழவிக்குக் கிட்டதட்ட அறுபது வயதிருக்கலாம். எனினும் தலையெல்லாம் பறட்டையாகி சூம்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி திரிதிரியாய் இருக்கும். முழு நரை; எண்ணெய் அறியாததால் அதில் பளபளப்புக்கு இடமில்லை. சொத்தையாடித் தெறித்துப்போன இரண்டு குறைப் பற்களைத் தவிர வேறு பல் கிடையாது. முகம் சுருக்கு விழுந்த ஈரத் துணி மாதிரி வதங்கிக் கிடக்கும். இடையில் கந்தல் கந்தலான ஒரு சேலை, தனது நிஷ்காம்ய சேவை பங்கப் பட்டுவிடக் கூடாதே என்று ஒட்டி ஒடுங்கிக் கிடக்கும்.

அவள் தினம் தினம் பிச்சை யெடுப்பாள். காரில் ஏறவரும் ஆத்மாக்கள் யாரேனும் தாராளமாய் மடியவிழ்த்தால் உண்டு. ஆனால் ஒவ்வொரு பஸ்ஸாக  இடமில்லாமல் தவறவிட்டுத் தவிக்கும் நபர்களுக்கு தரும சிந்தனைக்கு இடமிராதுதான். எனினும் சிலர் அவர்களுக்கு தருமம் செய்ததன் புண்ணியமாகவாவது, அடுத்த பஸ்ஸில் இடம் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையில் காலணா அரையணா விட்டெறிவதும் உண்டு. ஆனால் அரச மரத்தைச் சுற்றி விட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பதில் எவ்வளவு அர்த்தம் உண்டோ அவ்வளவுதான் இதிலும் உண்டு.

அந்தப் பையனும் அப்படிதான். ‘சாமி! தாயில்லாப் பிள்ளை, சாமி’ என்று சொல்லிப் பிச்சை யெடுப்பான்.

அவர்கள் இருவரும் பிச்சை எடுப்பதை நான் எவ்வளவோ காலமாகப் பார்த்து வந்திருக்கிறேன்; என் பையில் கடைசியாக மிஞ்சும் காலணாவையும் அவர்களுக்கு விட்டெறிந்து சித்ரகுப்தனின் தருமச் சிட்டையில் நானும் இடம் பெற முயன்றிருக்கிறேன். சமயங்களில், ‘சரி தாண்டா, போடா. நீ கைநீட்டிப் பிச்சை எடுக்கிறே; நான் அதைச் செய்யலே’ என்று முப்பது முப்பத்தோராம் தேதிகளில் எரிந்தும் விழுந்திருக்கிறேன்.

அவர்கள் பிழைப்பு அந்தப் பிச்சையிலேதான் நடந்து வந்தது. பிச்சையெடுக்கும் அவர்களால் சேர்த்து வைக்க முடியாது. ‘நாலணா சேர்ந்தது; பக்கத்து ரிக்‌ஷா ஸ்டாண்டுக் கூடைக்காரியிடம் ஒரு கவளம் சோற்றை வாங்கித் தின்றோம்’ என்றும் கிடையாது. ஓரணா சேர்ந்ததுமே பக்கத்து நாயர் ஹோட்டல் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். உடனடிப் பிரச்சினையாகத் தோன்றித் தோன்றி வரும் பசியை, தற்காலிகமாகத் தணிக்கவெண்ணி நாயர் ஹோட்டலில் ‘டி சிங்கிள்’ சாப்பிடுவார்கள்; அதன் மூலம் பசியைத் தணித்துக்கொள்ள முடியாவிட்டாலும் பசியைக் கொன்று விடுவார்கள்.

சமயங்களில் அவர்கள் இருவருக்கும் சண்டையும் மூண்டு விடுவதுண்டு.

‘பிசாசே! நீயேன் இங்’னெ வந்து பிச்சை யெடுக்கே? உனக்குப் பேதி வராதா? போயேன், அந்த இஸ்டாண்டுக்கு. இங்’னே வந்து என் புயைப்பிலே ஏன் மண்ணைப் போடுதே?’ என்று சீறுவாள் கிழவி.

‘நீதான் போயேன்!’ என்று பையன் துணிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மீண்டும் கை நீட்ட ஆரம்பித்து விடுவான்.

இருவரும் தொழில் முறையில் அநேகமாக எதிரிகளாகவே பழகி வந்தார்கள்! எனினும் அந்த பையனின் திடீர் மரணம்?

‘என்ன இருந்தாலும் அவளும் ஒரு பிள்ளையையாவது பெற்று, கொஞ்சிக் குலாவியிருக்கமாட்டாளா? அவளுக்கும் இதயம் கிடையாதா? பாவம்… அந்தப் பையன் செத்ததால், தனக்கு இனி தொழில் வட்டாரத்தில் ஏகபோக  ஆதிபத்யம் கிடைக்கும் என்று தெரிந்தபோதிலும், அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள்? அவளும் மனுஷி! அவளும் கருணை உணர்ச்சியுள்ள கட்டை!

‘அப்படித்தானா?…’

நான் எப்போது தூங்கினேனோ, எனக்குத் தெரியாது.


மறு நாள் காலையில் நான் சாப்பாட்டை முடித்துவிட்டு, ஆபீசுக்குக் கிளம்புமுன் டிராயரைத் துழாவினேன்; அதில் அரையணாக்கூட இல்லை. ‘சரி. போனால் போகுது’ என்று பொடி நடையாக வண்டியைத் தட்டிவிட்டேன். வரும் வழியெல்லாம் அந்த கிழவியும் பையனுமே என் மனசில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இன்று அந்தக் கிழவி தனியாகத்தான் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். அந்தப் பையனின் உடம்பும் இதற்குள் புதைபட்டுப் போயிருக்கும். இன்று அவளைப் பார்க்கவேண்டும். எதிரி தொலைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியோடிருப்பாளா அல்லது தனது தொழில் முறைக்காகவும் பேச்சுத் துணையுமாயிருந்தவன் போய்விட்டானே என்ற வருத்தத்தோடு இருப்பாளா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தேன். நடக்கும்போது யோசிக்க ஏதாவது வேண்டுமே!

ஆபீசை நெருங்கியதும் என் பார்வை பக்கத்துச் சந்தில் திரும்பியது.

அங்கு நான் கண்ட காட்சி –

சந்துக்குள் அந்தக் கிழவியும் அந்தப் பையனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழவி சந்தனத்தை அவனுடைய மூடிய கண்களில் அப்பிக் கொண்டிருந்தாள்; பையன் தன் இரு பெருவிரல்களையும் சடம்புக் கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தான்.

“ஏ, கெய்வி! கண்ணுலே மெதுவா அப்பு. ஒரேயடியாய்க் கரிக்குது” என்றான் பையன். அதுவும் என் காதில் விழத்தான் செய்தது. ஆம், அந்தப் பையன் சாகவில்லை!

எனக்கு மண்டையில் ஓங்கியடித்த மாதிரி இருந்தது.

‘அப்படியானால் நேற்று நடந்ததெல்லாம் ஒரே மாய் மாலம் தானா? அந்தப் பையன் செத்துப்போன மாதிரி நடிப்பதும், அவள் பெற்றுப்போட்ட தாய்மாதிரி அலறுவதும் அவர்களுக்குள் நடந்துகொண்ட வியாபார ஒப்பந்தம்தானா? எப்படி மதகுரு, ஏசுவின் சிலுவைப் புண்களைக் காட்டிக் காசு பறிக்கிறானோ, எப்படி வயிற்றில் சேலையைப் பொதிந்து கட்டிக்கொண்டு பிள்ளைத்தாச்சி என்று கூறி, சில பெண்கள் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி உடம்பிலும் நாக்கிலும் வேல் ஊசிகளைக் குத்திக்கொண்டு முருகன் பேர் சொல்லிச் சிலர் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி எழுத்தாளன் சோகக் கதைகளை எழுதி, பிழைப்பு நடத்துகிறானோ அப்படித்தான் இவர்களும் பிழைக்கிறார்கள். உலகில் நல்லபடியாய் பிழைக்க முடியாதா? மனிதனின் நல்லுணர்ச்சிகளைச் சுரண்டித்தான் பிழைக்க முடியுமா?’

எதுவும் புரியாமல் ஆபீசுக்குள் சென்றேன். அங்கு யாரோ, யாரிடமோ “இது என்னங்க, வெறும் செத்த பிழைப்பு!” என்று கூறுவது காதில் விழுந்தது.

‘அப்படியா? இந்த சமுதாய வாழ்க்கையே வெறும் செத்த பிழைப்புதானா? இல்லை. இல்லவே இல்லை. பிழைப்பு வேறு; வாழ்க்கை வேறு. நாம் நம் வயிற்றைக் கழுவ நினைப்பது பிழைப்பு, சமுதாய முழுமைக்கும் வயிற்றைக் கழுவ வழிகாண்பது வாழ்க்கை. நாம் வாழ்வதற்காகவே பிழைக்க வேண்டும்; பிழைப்பதற்காக வாழக் கூடாது! இந்த எண்ணம் எனக்கு, உங்களுக்கு, அந்தக் கிழவிக்கு, அந்தப் பையனுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், நாம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியதில்லை; நன்றாக, பரிபூரணமாக வாழ்ந்த திருப்தியோடேயே சாகலாம்…’

அன்றைய மாலைக் காப்பி கசக்கத்தான் செய்தது என்றாலும் அந்தக் கசப்பில் நல்ல ருசியும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *