சிறுகதை: பெயரில் என்ன இருக்கிறது? – நெ. சி. தெய்வசிகாமணி

ஓர் ஊரில் மண்ணாங்கட்டி என்றோர் விவசாயி இருந்தான். அவன் தாய் தந்தையருக்கு நிறையக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று கூட நிலைக்கவில்லை. கடைசியில் ஒரு குழந்தை பிறந்தது. ‘செல்லப் பெயர்களாக வைப்பதால் தானே எல்லாக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இந்தக் குழந்தைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்போம். இதுவாவது நிலைத்து இருக்கிறதா என்று பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் ‘மண்ணாங்கட்டி’ என்று பெயர் வைத்தனர்.

மண்ணாங்கட்டியும் நீண்ட ஆயுளைப் பெற்றுக் கொண்டு நல்லபடியாக வளர்ந்து வந்தான்.

மண்ணாங்கட்டி பெரியவனாகி விட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவனை ‘மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி’ என்று கூப்பிடுவது அவனுக்கு வேதனையாக இருந்தது.

‘உலகத்தில் எவ்வளவோ நல்ல பெயர்கள் இருக்க நமக்கு ‘மண்ணாங்கட்டி’ என்று நம் பெற்றோர் பெயர் இட்டனரே! இதனால் அல்லவா நாம் எல்லாருடைய கேலிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது என்று நினைத்த மண்ணாங்கட்டி எப்படியாவது தன் பெயரை மாற்றி வேறு நல்ல பெயராக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

அவ்வூருக்குப் புதிதாகச் சாமியார் ஒருவர் வந்திருந்தார். ஊர்க்கோடியில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார். ஊர் மக்கள் அனைவரும் சென்று சாமியாரைப் பார்த்துத் தங்கள் குறைகளை அவரிடம் கூறினர். சாமியாரும் அவர்கள் குறை தீர்வதற்காக இறைவனிடம் வழிபாடு செய்துகொண்டார்.

மண்ணாங்கட்டியும் ஒரு நாள் சாமியாரிடம் சென்றான்.

மண்ணாங்கட்டியைப் பார்த்த சாமியார், ‘மகனே, உன் குறை என்ன’ என்று அன்புடன் கேட்டார்.

“சுவாமி! என் பெற்றோர் எனக்கு மண்ணாங்கட்டி என்று பெயரிட்டு விட்டனர். அது அப்படியே நிலைத்துவிட்டது. எல்லாரும் என்னை, ‘மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி’ என்றே குறிப்பிடுகின்றனர். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. தாங்கள்தான் எனக்கு வேறு ஒரு நல்ல பெயராக வைக்க வேண்டும்” என்றான் மண்ணாங்கட்டி.

“மகனே, நான் உனக்கு ஒரு பெயர் வைப்பதைவிட நீயே ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு என்னிடம் வா. அந்தப் பெயரையே உனக்குச் சூட்டி ஆசீர்வாதம் செய்கிறேன்” என்று மண்ணாங்கட்டியிடம் கூறினார் சாமியார்.

மண்ணாங்கட்டி கடைத்தெருவுக்குச் சென்றான். அங்கு ஒரு கடைக்காரர் தம்மிடம் பிச்சை கேட்க வந்த ஒரு பிச்சைக்காரனிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.

“உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? கடா மாடு மாதிரி இருந்து கொண்டு பிச்சையெடுக்க வந்துவிட்டாயே! போ, போ!” என்று பிச்சைகாரனை அடிக்காத குறையாக விரட்டினார் கடைக்காரர்.

பிச்சைக்காரனைக் கடைக்காரர் விரட்டுவதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், “பேர்தான் தருமராசன்! பிச்சைக்காரர்களுக்கு ஒரு பைசா கொடுக்க மனம் வராது!” என்று கடைக்காரனைத் திட்டியபடியே சென்றுகொண்டிருந்தார்.

எதிரே ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் மண்ணாங்கட்டியிடம், “சாமி இரண்டு கண்களும் தெரியாதவன். தருமம் செய்யுங்கள்” என்றபடியே தகரக் குவளையை அவன் முன் நீட்டினான்.

மண்ணாங்கட்டி, பிச்சைக்காரனின் தகரக்குவளையில் ஐந்து காசு நாணயத்தைப் போட்டு விட்டு, “உன் பெயர் என்ன?” என்று பிச்சைக்காரனைப் பார்த்து கேட்டான்.

“என் பெயர் கண்ணாயிரம்!” என்றான் பிச்சைக்காரன். ‘அட பாவமே, பேர் கண்ணாயிரம்! இரண்டு கண்ணும் இல்லையே!’ என்று நினைத்தவாறே மேற்கொண்டு நடந்து கொண்டிருந்தான், மண்ணாங்கட்டி.

எதிரே ஒரு பிணம் வந்து கொண்டிருந்தது. நான்கு பேர் அதனைத் தூக்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.

மண்ணாங்கட்டி, இறந்துபோனவர் யார் என்று எதிரே வந்தவரிடம் கேட்டான்.

“இவரைத் தெரியாதா உனக்கு? இவர்தான் சிரஞ்சீவி” என்றார் எதிரே வந்தவர்.

“சிரஞ்சீவி என்று பெயர் வைத்துக்கொண்டவர்கள்கூட இறந்து விடுவார்களா?” என்று வியப்புடன் எதிரே வந்தவரைப் பார்த்துக் கேட்டான் மண்ணாங்கட்டி.

“பைத்தியக்காரா, பெயரில் என்ன இருக்கிறது? அழகேசன் என்று பெயர் இருக்கும்; பார்த்தால் அவலட்சணமாக இருப்பான். லட்சுமி என்று பெயர் இருக்கும்; அவள் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். இதெல்லாம் சகஜம்” என்று கூறிவிட்டுச் சென்றார் எதிரே வந்தவர்.

பிறகு மண்ணாங்கட்டி நேரே சாமியாரிடம் சென்றான்.

“மகனே, நல்ல பெயராக ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து விட்டாயா?” என்று மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.

“சுவாமி, நிறையப் பெயர்கள் கிடைத்தன. ஆனால் ஒரு பெயர்கூட எனக்குப் பிடிக்கவில்லை. பெயருக்கும் குணத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருக்கிறார்கள்” என்றான், மண்ணாங்கட்டி.

“மகனே, இதனை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவ்வாறு கூறினேன். செய்கிற செயல் நல்லதாக இருந்தால் பெயரை ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். குணம் கெட்டதாக இருந்தால் எவ்வளவு நல்ல பெயராக வைத்திருந்தாலும் மக்கள் அவர்களைத் திட்டத்தான் செய்வார்கள். ஆகையினால் பெயரைப் பொருட்படுத்தாதே! குணத்தில் சிறந்தவனாக விளங்கு. மக்கள் உன்னைப் புகழ்வார்கள்” என்றார் சாமியார்.

அன்றிலிருந்து மண்ணாங்கட்டி எல்லாருக்கும் நல்லவனாக விளங்கினான். இப்பொழுது அவனை எவரும் கேலி செய்வதில்லை; மாறாகப் புகழ்கிறார்கள்.

(திரு. நெ. சி. தெய்வசிகாமணி அவர்கள் எழுதிய “நீதிக்குச் சில கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *