சிறுகதை: பொறுமையால் கண்ட உண்மை – அண்ணாமலை

காலை 9 மணி. பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிக்கூட மாணவர்கள் முண்டி அடித்துக் கொண்டு வண்டியில் ஏறினர். சிலர் ஏறும் வழியிலும் சிலர் இறங்கும் வழியிலும் நின்று கொண்டனர். இன்னும் சிலர், வண்டியில் தொத்திக் கொண்டனர்.

கண்டக்டர் விசில் கொடுத்தார். வண்டி நகர ஆரம்பித்தது. ஆதிமூலம் வேகமாக ஓடிவந்தான். அவனைக் கண்டதும் வண்டியில் தொத்திக்கொண்டிருக்கும் மனோகர், “ஓடிவா ஆதி, சீக்கிரம் வாடா” என்று  அழைத்தான்.

ஆதிமூலம் வண்டியில் ஏறுவதற்கு ஓடலானான். அவனை யாரோ பிடித்து நிறுத்துவதைக் கண்டான். ‘யார் இவர். எதற்காக என்னைப் பிடித்து நிறுத்துகிறார்? என்னுடைய நண்பர்கள் அந்த வண்டியில் போகிறார்கள். நான் அந்த வண்டியை…?’ என்று நினைத்தான். தன்னைப் பிடித்தவர் கையைத் தட்டினான்.

“தம்பி! எதற்கு அவசரமாக ஓடுகிறாய்? அந்த வண்டியைப் பார். அதில் பெரும் கூட்டம் செல்கிறது. அதற்குள்  உட்காருவதற்கு இடமில்லை. அந்த வண்டியில் முறையாகப் பயணம் செய்ய இடமில்லை என்று தெரிந்தும் சிலர் தொத்திக் கொண்டு போவதைப் பார். அந்த வண்டியில் போக ஆசைப்படலாமா?” என்று கூறினார் அருள்சாமி.

“என் நண்பர்கள் எல்லாரும் அந்த வண்டியில் செல்கிறார்கள். நானும் போகவேண்டும். என்னைத் தடுக்காதீர்கள். என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு ஓட முயன்றான் ஆதிமூலம்.

“தம்பி! அந்த வண்டியில் போக வேண்டாம். நான் சொல்வதைக் கேள். நில்” என்று ஆதிமூலத்தைத் தடுத்து நிறுத்தினார் அருள்சாமி.

ஆதிமூலம் ஓடி வண்டியில் ஏறும் எண்ணத்தைக் கைவிட்டான். தன்னைத் தடுத்த பெரியவரைப் பார்த்தான். நம்மை ஏன் தடுத்தார் என்று யோசித்தான்.

“தம்பி! நீ படிக்கும் பள்ளிக்கூடம் செல்வதற்கு இந்த வண்டி மட்டும் இல்லை. இன்னும் ஏராளமான வண்டிகள் வரும். அவைகளில் போகலாம். அதுவரைக்கும் பொறுமையாய் நில்” என்று கூறினார்.

வண்டி நிறைய நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஏறிச் சென்றார்களே அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்? என்று கேட்பது போல் அவரைப் பார்த்தான், ஆதிமூலம்.

“அந்த வண்டியில் செல்லும் உன் நண்பர்களைப் பார்த்து அவர்களைப் போல் நீயும் பயணம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறாய். அது தவறு. தெரியாமல் செய்யப்படும் தவறுக்கு மன்னிப்புண்டு. ஆனால் தெரிந்து தவறு செய்தால்?” என்று பேச்சை நிறுத்தினார் அருள்சாமி.

ஆதிமூலம் தன் கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த வண்டி வந்தது; கூட்டமும் குறைந்திருந்தது. இருவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர். வண்டி புறப்பட்டது.

வீதியில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. ஏராளமானவர்கள் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பாவம்! சிறு வயசு. யார் பெற்ற பிள்ளையோ! பலத்த அடிபட்டது. அவன் உயிர் பிழைப்பதற்கு அரிது” என்று தன் இரக்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு பஸ் பயணி.

“எதற்கு சார் இப்படி ஏற வேண்டும்? அடுத்த வண்டியில் வரக் கூடாதா? இந்த வண்டியில் கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்து ஏறலாமா? டிரைவர் என்ன செய்வார்? எதிரே வந்த வண்டி, உராய்ந்ததால் பையனின் கையும் காலும் உடைந்தது” என்றார் மற்றொருவர்.

“சார்! இந்தப் பையன்கள் வேண்டுமென்றுதான் இப்படி வருகிறார்கள். படிக்கின்ற இவர்களுக்குப் பொது அறிவு இருக்க வேண்டாமா? இதனால் எத்தனை பேருக்குத் தொல்லை” என்று தன் அலுவலக நேரத்தை நினைத்து வேதனைப்பட்டார்  மற்றோர் அலுவலர்.

விபத்துக்குள்ளான வண்டியிலிருந்து ஏறிய சிலர் பேசிய பேச்சுக்கள் ஆதிமூலத்தின் காதில் விழுந்தது. அருள்சாமி ஆதிமூலத்தைப் பார்த்தார்.

‘இவருடைய பேச்சைக் கேட்காமல்  நாமும் அவசரப்பட்டு வண்டியில் ஏறியிருந்தால் நம்முடைய உயிர் அந்த வண்டியின் சக்கரத்திலோ அல்லது எதிரே வரும்  வண்டிகளின் இடிபாடுகளிலோதான் முடிந்திருக்கும். எப்படியோ நல்ல வேளையாக நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்’ என்று நினைத்தான் ஆதிமூலம்.

“தம்பி! படிக்கின்ற இளைஞர்கள்தான் நாளை நாட்டை ஆளப் போகிறவர்கள். அவர்களிடம் பொறுமை இருக்க வேண்டாமா?

மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாய் நடந்து காட்ட வேண்டாமா?” என்று கேட்டார் அருள்சாமி.

ஆதிமூலம் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஆதிமூலம்! மனோகருக்கு அடிபட்டு விட்டது. அவன் உயிருக்கு ஆபத்து” என்று சொன்னான்  விசுவநாதன்.

ஆதிமூலம் பெரியவர் அருள்சாமியைப் பார்த்தான். ‘அவசரப்பட்டான்; ஆபத்தை அணைத்துக் கொண்டான். நீ பொறுமையாக இருந்ததால் உயிரோடு செல்கிறாய்’ என்று சொல்வதுபோல் பார்த்தார்.

“தம்பி! இப்பொழுதாவது புரிகிறதா? பொறுமையால் கண்ட உண்மை என்னவென்று?” என்று கேட்டார்.

கண்டக்டர் விசில் ஊதினார். வண்டி ஓடியது.

(புலவர் திரு. அண்ணாமலை அவர்கள் எழுதிய “சிறுவர் கதைப் பூங்கா” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *