சிறுகதை: முள்மரம் – திருச்சி வாசுதேவன்

சந்திரன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவன் தந்தை நன்கு கற்றவர்; பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். சந்திரன் தன்னுடைய தாய் அல்லது தந்தையுடன் வெளியில் அடிக்கடி போய்வருவான். அந்தச் சமயங்களில் கடைகளில் காணப்படும் விளையாட்டுப் பொருள்களையோ தின்பண்டங்களையோ வாங்கித் தரும்படி கேட்பான்.

தங்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலோ சந்திரன் ஒரே பிள்ளை என்பதாலோ அவனுடைய பெற்றோர் அவன் விரும்பியதை வாங்கிக் கொடுத்துச் செல்லமாக வளர்த்து வந்தனர்.

முன்பெல்லாம் மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் பள்ளிப் பாடங்களைப் படிப்பான்; எழுதுவான். தனக்குத் தெரியாதவற்றைப் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வான். இப்போது அப்படியில்லை. மாலையில் வீட்டுக்கு வந்ததும் நண்பர்களுடன் விளையாடச் சென்று   வீடு திரும்பிய பின் சிறிது நேரமே கல்வியில் கவனம் செலுத்துவான்.

சிலசமயம் சந்திரனின் பள்ளி நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு சில பையன்கள் அவனைத் தேடி வர ஆரம்பித்தனர். இயல்பாகப் பள்ளிச் சிறுவர்களிடம் காணப்படும் இனிமையான முகத் தெளிவு அவர்களிடம் இல்லை. எனவே, சந்திரனின் தாய் அவனை அவர்களுடன் விளையாடச் செல்ல அனுமதிக்கவில்லை. என்றாலும் சாக்குப் போக்குகள் கூறி அவர்களுடன் சென்று விடுவான்.

சில மாதங்கள் சென்றன.

ஒரு விடுமுறை நாளில் சந்திரனின் தந்தை காலையில் எங்கோ வெளியில் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சந்திரன், தன் நண்பன் ஒருவனைப் பார்த்து வருவதாகத் தாயிடம் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். சென்றவன் நெடுநேரமாகியும் வரவில்லை.

வீட்டு வேலைகள் முடிந்த பிறகு சந்திரனின் தாய், வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மலர்கள் கொய்யச் சென்றாள். அங்கே அடர்ந்திருந்த முல்லைக் கொடிகளின் அருகில், ஒரு சிறிய முள்மரமும் இருந்தது. அதை வெட்டியெறிய வேண்டுமென்று நினைத்தும் ஏதோ சோம்பலால் வெட்டியெறியவில்லை. சற்று உயரமான இடத்தில் அன்று முல்லையரும்புகள் நிறைய இருந்தன. அவற்றை அவள் எக்கி எக்கி முயன்று கொய்யும் போது அவளுடைய சேலைத் தலைப்பு, அருகில் இருந்த முள்மரக்கிளையில் சிக்கிக் கிழிந்து விட்டது.

உடனே அரிவாள் கொண்டு வந்து அந்த முள்மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினாள். அப்போது அவளுடைய கை கால்களில் முள்முனைகள் பட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

அன்றிரவு உணவு அருந்திய பின் சந்திரனின் பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சந்திரன் உண்டபிறகு தனது படுக்கைக்குச்சென்றுவிட்டான்.

அப்போது சந்திரனின் தந்தை முதல் நாள் இரவு தன் மணிப்பர்ஸில் நான்கு ஐந்து ரூபாய் நோட்டு வைத்திருந்ததாகவும், அன்று வெளியில் சென்றிருந்த போது பார்க்கையில் மூன்று நோட்டுகளே இருந்ததாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டதும் சந்திரனின் தாய் திடுக்கிட்டாள். பிறகு சிறிது யோசிப்பது போல் மௌனமாக இருந்துவிட்டு, “மன்னியுங்கள். இன்று எதிர்வீட்டிலிருந்து கமலா வந்து அவசரமாகக் கேட்டாள். எடுத்துக் கொடுத்தேன்; சொல்ல மறந்துவிட்டேன்!” என்றாள்.

பிறகு முள்மரத்தால் சேலைத் தலைப்புக் கிழிந்து போனதையும், அந்த மரத்தை வெட்டியெறிகையில் கைகளில் காயம் ஏற்பட்டதையும் விவரித்தாள். அவற்றைக் கேட்ட சந்திரனின் தந்தை, முள்செடியை ஆரம்பித்திலேயே களைந்து விட வேண்டும், அது முற்றி மரமானால் வெட்டுகிறவர் கைகளுக்குத் தீங்கு செய்யும் என்று திருக்குறள் கூறியபடிதான் நடந்துள்ளது என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் சந்திரனின் தாய் மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். அப்போது அவர்,

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து!

என்னும் குறட்பாவைக் கூறியதுடன், சில உவமைகளும் சொன்னார். அதாவது பொய், களவு, சூது ஆகிய தீய பழக்கங்கள் முள்செடியைப் போன்றவை. அந்தப் பழக்கங்களை ஆரம்பத்திலேயே ஒழித்துவிட வேண்டும். இல்லையேல், அந்தப் பழக்கம் உள்ளவர்கள் தாங்களும் துன்பமடைவர்; அவர்களால் சமூகத்துக்கும் கேடு விளையும் என்று விளக்கினார்.

மறுநாள் காலை வழக்கம் போல் சந்திரனின் தந்தை அலுவலகம் சென்றுவிட்டார். அவர் சென்றதும் சந்திரன் தன் தாயிடம் வந்து நின்றான். முகத்தில் கலக்கம் இருந்தது. சரளமாகப் பேச முடியவில்லை. தாய் வற்புறுத்திக் கேட்கவே தயங்கிக் கொண்டே பேசினான்.

முதல் நாள் இரவு, அவளும் தந்தையும் பேசிக் கொண்டிருந்தவற்றைத் தான் கேட்டதாகவும், அது முதல் தனது நெஞ்சில் ஒரு சுமை ஏற்பட்டது என்றும் கூறினான். அதைக் கேட்டு அவள் மிகவும் ஆச்சரியம் அடைந்தாள்.

மேலும், சந்திரன் தன் சிநேகிதன் ஒருவனின் பேச்சைக் கேட்டு அப்பாவின் பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறான் என்பதையறிந்ததும் மிகவும் வேதனைப்பட்டாள். தங்களுடைய ஒரே புதல்வன், தகாதவர்களின் நட்பினால், புத்திகெட்டு விட்டானே என்று எண்ணும் போது அவள் கண்கள் கலங்கின.

அந்த நிலையில் தன் தாயைக் கண்ட சந்திரனுக்கும் அழுகை வந்து விட்டது. ‘அம்மா அழாதே அம்மா! இனிமேல் எந்தத் தவறும் செய்யமாட்டேன், நீங்கள் முள்மரத்தை வெட்டியெறிந்த மாதிரி, நானும் அந்தப் பையன்களின் நட்பை வெட்டியெறிந்து விடுகிறேன்!’ என்றான் தேம்பிக்கொண்டே.

சந்திரனின் தாயுள்ளம் நெகிழ்ந்தது. தன் முன்றானையால் அவன் கண்களைத் துடைத்தாள். அப்போது அவனுக்கு வாழ்த்துக் கூறுவது போல அவளுடைய கண்ணீர் முத்துக்கள் அவன் தலையில் உதிர்ந்தன!

(கவிஞர் திருச்சி வாசுதேவன் அவர்கள் எழுதிய ‘பாலர் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *