சிறுகதை: சர்ஜன் வாசுக்குட்டி – இராஜாஜி

பக்த சிரோமணியாக ஊரில் பெயரெடுத்த கோபாலையருடைய துக்கம் தாங்க முடியாத நிலையை அடைந்தது. அதன் காரணம் அவருடைய தெய்வ பக்தியெல்லாம் அடங்காத கோபமாக மாறிவிட்டது. வீட்டிலிருந்த சாமி படங்கள் அத்தனையையும் கண்ணாடிச் சட்டங்களுடன் சுக்குநூறாக்கி வீதியில் குப்பைத் தொட்டியில் போட்டார். “வேண்டாம்! வேண்டாம்; மகா பாவம்!” என்று மனைவி கதறினாள். “தெய்வமும் இல்லை, ஒன்றும் இல்லை” என்று மனைவியை அதட்டிப் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமத்தைக் கிணற்றில் போட்டார். துக்கம் உன்மத்தமாயிற்று. வெகு நாள்கள் வரையில் பைத்தியமாக நடந்து கொண்டார்.

இந்தக் கதையை முதலிலிருந்து சொல்கிறேன். ஆஸ்தீக நாஸ்தீக வாதங்கள் மிகப் பழைய சமாசாரம். அந்த சர்ச்சைக்கு முடிவேயில்லை. இரு தரப்பிலும் உண்மையைக் கண்டவர்கள் இல்லை. உண்மையைக் காணாதவர் இடும் வாதத்துக்கு முடிவு ஏது? அவரவர்கள் அனுபவத்தின் பயனாக உணர்ச்சிகள் உண்டாகின்றன. அந்த உணர்ச்சிகளே வாதங்களாகின்றன. வாதத்துக்கும் முடிவு இல்லை. ஊருக்கும் வழியில்லை.

கோபாலையருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஒரே ஒரு பெண் குழந்தை. ‘மங்களம்’ என்று அதற்குப் பெயரிட்டு, மிகவும் பிரியமாகத் தகப்பனாரும் தாயாரும் வளர்த்தார்கள். பதினாறு வயதாயிற்று.

“மங்களம்! எனக்கு அந்தச் சாமிநாதனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை; ஏதோ இன்ஜினியர் படித்துப் பாஸ் செய்திருக்கின்றான் என்று உன் அப்பா அவனை விரும்புகிறார். கன்னங்கறேலென்று ஒரு மாப்பிள்ளையைப் பிடித்தார் உன் அப்பா. எனக்கு நம்ம கிருஷ்ணமூர்த்திதான் பிடித்திருக்கிறது. என்ன சொல்கிறாய்? அவனும் கொஞ்சம் படித்துத்தான் இருக்கிறான். மேலும் படித்து இன்ஜினியரோ, டாக்டரோ அவனுந்தான் படிப்பான். லஷணமாய் இருக்கிறான். அவனை விட்டு இந்தக் கறுப்பனையா நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்?” என்றாள் கமலம்மாள்.

துணி கிழிந்திருந்ததை மங்களம் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தாள். “இவனும் வேண்டாம், அவனும் வேண்டாம், அம்மா! என்னைத் தொந்தரவு படுத்தாதே” என்றாள் மங்களம்.

இவ்வாறு தினமும் மாறி மாறிப் பேச்சும் விவாதமும் நடந்தன. முடிவில் மங்களத்தைச் சாமிநாதனுக்கும் கொடுக்கவில்லை, கிருஷ்ணமூர்த்திக்கும் கொடுக்கவில்லை. கமலம்மாளுக்கு ஓர் அண்ணன்; சொந்த அண்ணன் இல்லை – தகப்பனாரின் முதல் தாரத்து வயிற்றில் பிறந்த மகன். அவனுடைய மகன் வாசு; மங்களத்துடன் குழந்தைப்பருவம் முதல் கூடி விளையாடி வந்த பையன். “வாசுவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்று மங்களம் பிடிவாதம் பிடித்தாள். தகப்பனாரும் ஒப்புக் கொண்டார். சோதிடர்களும் இது ரொம்ப நல்ல ஜோடி என்றார்கள்.

மங்களத்தை வாசுதேவனுக்குக் கொடுத்துத் திருப்பதியில் விவாக முகூர்த்தம் சுருக்கமாக நடந்தது.


வாசுவும் மங்களமும் ஒரு வருஷம் கோபாலையர் வீட்டிலேயே சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அடுத்த வருஷம் சித்திரை மாதத்தில் மணலூரில் நடந்த பெரிய ரெயில் விபத்தில் வாசு உயிர் நீத்தான். அது காரணமாகத்தான் கோபாலையர் நாஸ்திகராகி விட்டார்.

“மங்களம் என்று பெயர் வைத்தேனே; விதவையாய்ப் போனாயே!” என்று தாயார் குழந்தையைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

“நான் செய்த பூஜை எல்லாம் பொய்யாகி விட்டதே! ஏற்றிய கற்பூரம் பிசாசுக்காயிற்றே! தெய்வமும் இல்லை, தேவியுமில்லை; எல்லாம் பொய்!” என்றார் கோபாலையர். மூன்று மாதங்கள் முழுப் பைத்தியமாகவே நடந்து கொண்டார்.

“விவாகம் ஆனபோது மங்களம் சாதாரணப் படிப்புத்தான் படித்து முடித்திருந்தாள். விபத்துக்குப் பிறகு கோபாலையர் ஓரளவு சாந்தமடைந்தபின் மங்களத்தைப் பள்ளிக் கூடத்தில் மறுபடியும் சேர்த்தார். மங்களம் படிப்பில் நன்றாகத் தேறி வருஷம் தவறாமல் படிப்படியாக விருத்தியடைந்தாள். பத்து ஆண்டுகள் முடிந்து மங்களம் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.

மங்களத்திற்கு இப்போது இருபத்தைந்து வயது. உயர்தர வகுப்பில் வைத்தியப் பரீட்சை தேறிவிட்டாள். வைத்தியக் கல்லூரியில் கூடப் படித்த பலபேர் அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். தாயாரும் கூட மறு விவாகத்துக்கு ஓரளவு சம்மதித்தாள். “சாஸ்திரமாவது? கடவுளாவது! அவள் இஷ்டம்” என்றார் தகப்பனார். வாசு இறந்தது முதல் கோபாலையருக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆனபடியால் மங்களத்தின் மறுவிவாகத்திற்கு முற்றும் சம்மதித்தார்.

“அவள் இஷ்டம்” என்று தகப்பனார் சொன்னதைக் கேட்டு மங்களம் “எனக்கு விவாகம் வேண்டாம். பிரசவ விடுதி வைத்து என் படிப்பைச் சமூகப் பணியாக்கி அந்த விதத்தில் காலங்கழிப்பேன்” என்றாள்.

“சமூகப் பணியாவது, மடத்தனமாவது! பணம் சம்பாதிக்கப்பார்” என்றார் கோபாலையர். “அப்படியே” என்றாள் மங்களம் சிரித்துக் கொண்டு. “பிரசவ விடுதியில் நல்ல பணமும் உண்டு” என்றாள். தகப்பனாரும் இதற்கு ஒப்புக்கொண்டு வேண்டிய செலவுக்கெல்லாம் தாராளமாகப் பணம் தந்தார்.


இப்போது ‘மங்களம்மாள் பிரசவ விடுதி’யில் வருஷம் ஒன்றுக்கு ஐம்பது தாய்மார்கள், குழந்தைகள் பெற்றுச் சொஸ்தமடைந்து சந்தோஷமாகத் தத்தம் வீடுகளுக்குச் செல்கிறார்கள். வியாதியஸ்தர்கள் விடுதியில் முப்பது பேர் வரையில் எப்போதும் இருந்து வந்தார்கள். ‘இதுவல்லவோ வாழ்க்கை’ என்றாள் மங்களம்மாள் தன் தாயாரிடம். ‘மங்களம்மாள் பிரசவ விடுதி’ பெரிய புகழ்பெற்ற ஸ்தாபனமாகிவிட்டது. விடுதியில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மங்களம் தன் தாயார் கமலம்மாளிடம் காட்டிச் சந்தோஷப்படுவாள். வருமானமும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே வர ஆரம்பித்தது.

“நான் விதவையானேன் என்று பகவான் பேரில் கோபித்தீர்கள்; ஆண்டவன் சங்கற்பத்தை அறியாமல் நாம் என்ன என்னவோ செய்கிறோம்! எனக்கு எத்தனை குழந்தைகள் பார்த்தாயா?” என்பாள் மங்களம் தாயாரிடம். கமலம்மாளும் சந்தோஷமாகப் பிரசவ விடுதியில் சில்லறை வேலைகள் செய்து வந்தாள்.

கோபாலையர் மறுபடியும் ஸ்வாமி படங்களைச் சம்பாதித்து வீட்டில் சுவரில் மாட்டிப் பூஜை செய்ய ஆரம்பித்தார். திருப்பதிக் கோவிலுக்கு வருஷம் தவறாமல் மனைவியுடன் போய் வந்தார். “கோவிந்தா! உன்னைத் திட்டினேன், கிணற்றில் போட்டேன். நீ சினம் கொள்ளாமல் காத்தாய்” என்று கூறிப் பிரகாரமும் சுற்றி உருண்டு சேவை செய்து வந்தார். சுந்தர காண்டம் பாராயணம் செய்யலானார்.

தகப்பன் யார் என்று இல்லாத ஒரு குழந்தை, விடுதியில் பிறந்தது. ஓர் அனாதைப் பெண், விடுதிக்கு வந்து அந்தக் குழந்தையைப் பெற்றாள். “இந்தக் குஞ்சை  நீ எடுத்து வளர்த்துக்கொள், டாக்டர் அம்மா! உனக்குக் குழந்தை இல்லையாமே!” என்றாள் அந்த அனாதை ஸ்திரீ தைரியமாக.

“நான் மூன்று குழந்தைகளைக் கொன்ற பாவி. அந்தப் பாவம் தீரும், அம்மா, நீ இதை வளர்த்தாயானால்” என்று அந்த அநாதை கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

குழந்தை அழகாக இருந்தது; மங்களத்தின் முகத்தை நோக்கிச் சிரித்தது. “என்ன சொல்கிறாய் அம்மா?” என்று மங்களம், தன் தாயார் கமலம்மாளைக் கேட்டாள்.

“என்ன சாதியோ, என்ன குலமோ, ஒன்றும் தெரியாமல் இதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்றாள்.

அப்போதுதான் கோபாலையர் திருப்பதியிலிருந்து திரும்பி வந்தவர், “சாதியாவது, குலமாவது? கோவிந்தனுக்கு ஒரே குலம். இன்று அவன் எனக்குப் பிரசன்னமாகி, ‘உனக்கு ஒரு பேரனைக் கொடுக்கிறேன்; வைத்து வளர்த்துக்கொள்’ என்றான். அவன் சொன்னது நடந்துவிட்டது!” என்று குழந்தையை எடுத்து மகளிடம் தந்தார்.

“இது பிராமணக் குழந்தைதான். முகத்தைப் பார்” என்றாள் கமலம்மாள்.

“எந்தக் குலமானால் என்ன? அப்பா எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றாள் மங்களம்.

அந்தக் குழந்தைதான் இப்போது வாசுக்குட்டி என்கிற பெயர்போன ரணசிகிச்சை வைத்தியர்.

One thought on “சிறுகதை: சர்ஜன் வாசுக்குட்டி – இராஜாஜி

  1. Manikandan

    Very nice to see this story which I studied in my schooldays. Really nice experiance, Thanks for sharing this

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *